விக்கி, விஜயகலாவின் கருத்துக்களால் நாட்டுக்கு பேராபத்து – அஸ்கிரிய அனுநாயக்கர் எச்சரிக்கை


வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ​ஆகி​யோர் தெரிவிக்கும் கருத்துகளால், நாட்டுக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக கண்டி அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஆனமடுவே தம்மதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கண்டி அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யுத்தத்துக்கு பின்னர், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், அரசாங்கம் அசமந்தப்போக்குடன் செயற்படுவதாகவும் இது தொடர்பில், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், தமிழர் தரப்பிலிருந்து தங்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதெனக் குறிப்பிட்டுள்ளார்.

“அந்தக் கோரிக்கையை ஏற்று, நாமும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, தமிழ் மக்களின் சில பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்திருந்தோம்” எனவும், அனுநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.

“இதேவேளை, சமஷ்டி ஆட்சிமுறை, மாகாண சுயாட்சி மற்றும் வட மாகாணத்துக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க வேண்டுமென்கிற கோரிக்கைகளும் தமிழர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகின்றன.

“இலங்கையானது, ஒற்றையாட்சி நாடு என்பதால், இவ்வாறான கோரிக்கைகள், ஒற்றையாட்சி முறைமைக்குப் பாதகத்தை ஏற்படுத்தும். ஆகவே, இந்தக் கோரிக்கைளுக்கு நாம் ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை. இது தொடர்பில், உரிய தரப்பினருக்கு நாம் தெளிவுபடுத்தியிருக்கிறோம்” என, தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்