ஈரானில் இன்றும் நிலநடுக்கம் -400 பேர் காயம்


ஈரான் நாட்டில் நேற்று மூன்று முறை தாக்கிய நிலநடுக்கம் இன்றும் தொடர்ந்ததால் இதுவரை 400 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் நேற்று இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.7 மற்றும் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் உண்டான பாதிப்பு தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

சில மணி நேரத்துக்கு பின்னர் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கேர்மன்ஷா மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 5.9 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தில் சுமார் 300 பேர் காயமடைந்ததாக கேர்மன்ஷா மாகாண ஆளுநர் ஹவுஸாங் பஸ்வன்ட் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈரான் தலைநகரான தெஹ்ரானில் இருந்து தெற்கே சுமார் 1100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கெர்மான் மாகாணத்துக்குட்பட்ட சிர்ச் கிராமத்தை இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகுகளாக பதிவான இன்றைய நிலநடுக்கத்தில் சுமார் நூறுபேர் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.

சமீபகாலமாக ஈரான் நாட்டின் சில பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கேர்மன்ஷா மாகாணத்தில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் நிலநடுக்கத்துக்கு சுமார் 620 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்