இந்திய அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கியுள்ள யாழ்.வீரன்

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய – இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் களமிறங்கியுள்ளார்.

19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது.

இப் போட்டியிலேயே யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி மாணவனான விஜயகாந்த் வியஸ்காந்த் என்ற வீரர் இலங்கை பதினொருவர் அணியில் விளையாடுகின்றார்.

யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியஸ்காந்த், மேல், வடமத்திய மற்றும் வடமேல் மாகாண அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிறந்த சுழற்பந்து வீச்சுப்பெறுதிகளைப்பெற்றுள்ளார். இதேவேளை, அணி இக்கட்டான நேரத்தில் துடுப்பெடுத்தாடும் திறமை கொண்டவர்.

அண்மையில் இடம்பெற்ற இந்திய மற்றும் இலங்கை 19 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சிப் போட்டியில் நான்கு விக்கெட்டுக்களைக் வியஸ்காந்த் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் இந்திய அணி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. தற்போதுவரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 331 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 59 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்