பாகிஸ்தான் வீரருக்கு இதை மட்டும் செய்தால் அவுட்டாகிவிடுவார்! இந்திய வீரர்களுக்கு பாடம் எடுத்த அவுஸ்திரேலியா முன்னாள் வீரர்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசியகோப்பைக்காக நடைபெறும் தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடிக்கும் அணி ஆகியவற்றிற்கு இடையிலான 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் திகதி துவங்கி செப்டம்பர் 28-ஆம் திகதி முடிவடையவுள்ளது.

இந்த தொடரில் பரம எதிரிகளாக பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் அணி மோதும் போட்டி 19-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின, அந்த போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைவதற்கு முக்கிய காரணம், பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த தொடக்க வீரர் பகர் சமான். இவர் அடித்த சதத்தால் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் பகர் மிரட்டி வருதால், சூப்பர் பார்மில் உள்ளார்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கல் ஹசி, பாகிஸ்தான் வீரர் பகர் சமானை வீழ்த்துவது எப்படி என்பது குறித்து கூறியுள்ளார்.

அதில், டைட் லைன் மற்றும் லெந்த் பந்துகளை தொடர்ச்சியாக வீசி அவருக்கு நெருக்கடியை உண்டாக்க முயற்சிக்க வேண்டும். சில டாட் பால் வீசி நெருக்கடி கொடுத்தால், அவர் விரும்புவதை விட முன்கூட்டியே பெரிய ஷாட்டுகள் அடிக்க முயற்சி செய்வார்.

அதேபோல் பந்துகளின் வேகத்தை குறைத்து, அதிகரித்து வீச வேண்டும். பகர் சமான் ஜிம்பாப்வே அணிக்கெதிராக ஓட்டங்கள் குவித்து நல்ல பார்மில் உள்ளார் என்ற நினைத்து விடக்கூடாது. இந்தியாவிற்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபியில் சதம் அடித்து வெகுநாட்கள் ஆகவில்லை அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா அல்லது பாகிஸ்தான் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது. இரண்டு அணிகளும் சமீபகாலமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்