யாழ். அபிவிருத்திக்கான ஐந்தாண்டு திட்ட அறிக்கை வெளியீடு!

ஐக்கிய நாடுகளின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நிதியத்தின் ஆதரவுடன், வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய அபிவிருத்திகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டம் தொடர்பான ஐந்து வருடங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் முன்மொழிவு செய்யப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன்போதே வடக்கு முதல்வர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்கு ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை அதன் பங்குதாரர்களை வைத்துக் கொண்டு தயாரிப்பதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட முன்னெடுப்புக்கள் மிக உதவியாகவும் ஏற்புடையதாகவும் காணப்பட்டுள்ளன. பன்முகப்படுத்தப்பட்ட பல திட்டங்களை உள்ளடக்கிய இத்திட்ட முன்மொழிவுகளை தயாரிக்கும் பணி திட்டமிடல் கிளை அதிகாரிகளுக்கும் அதன் பங்குதாரர்களுக்கும் ஒரு புதிய அனுபவம்.

எம்மிடமுள்ள வளங்களையும் உதவிகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டு அவற்றின் உதவியுடன் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக பயணம் செய்ய வேண்டும். அவ்வாறான நேரங்களில் எல்லாம் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தின் ஆதரவு தொடர்ச்சியாக எமக்கு கிட்டுவன என்பது ஆறுதலைத் தருகின்றது. போருக்குப் பிந்திய சூழலில் வடமாகாணத்தில் காணப்படும் அபிவிருத்தி உட்கட்டமைப்புகள், மனிதவள மேம்பாடு போன்ற இன்னோரன்ன விடயங்களைக் கண்டறிந்து. மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை இனம் காண்பதற்கும் அவற்றின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கண்டறிவதற்கும் புதிதாக தேவை மதிப்பீடு ஒன்றை செய்ய வேண்டுமென்று 2014ஆம் ஆண்டில் இருந்து வலியூறுத்தி வந்தேன் .

இதேவேளை, ஆராயப்பட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் நான் அவை பற்றி அதிகம் உரையாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்