தொடர்ந்து தாக்கினால் அனைத்தையும் அழிப்போம்- அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை

ஈரானை தொடர்ந்தும் தாக்கினால் அமெரிக்கா தற்போது அனுபவித்து வரும் சகல விடயங்களையும் அடியோடு அழிப்போம் என்று ஈரான் தளபதியொருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் சிறப்புப் படைகளின் தளபதியான மேஜர் ஜெனரல் குவாஸெம் சொலைமானி நேற்று (வியாழக்கிழமை) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அமெரிக்காவை ஈரான் இனிமேல் விமர்சித்தால் பாரிய விளைவை சந்திக்க நேரிடுமென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் எச்சரித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் தளபதி மேற்குறித்தவாறு கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

”ஒரு படையதிகாரி என்ற வகையில், உங்கள் எச்சரிக்கைக்கு பதிலளிக்க வேண்டியது எனது பொறுப்பாகும். என்னிடம் நேரடியாக கதைக்கவும். எமது நாட்டு ஜனாதிபதியுடன் அல்ல. உங்கள் எச்சரிக்கைக்கு பதிலளிப்பது எமது நாட்டு ஜனாதிபதிக்கு கௌரவம் அல்ல.

நீங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நாங்கள் உங்களை நெருங்கிவிட்டோம். வாருங்கள், நாங்கள் எதற்கும் தயாராகவே உள்ளோம்.

நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்தால், நாங்கள் அதனை முடித்துவைப்போம். உங்களது சகல விடயங்களையும் அந்த யுத்தம் அழிக்கும். ஆகவே எமது மக்களையும் எமது நாட்டு ஜனாதிபதியையும் விமர்சிப்பதில் கவனமாக நடந்துகொள்ளுங்கள்” என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

அத்தோடு, ட்ரம்பின் வார்த்தைகள் இரவு விடுதிகளிலும் சூதாட்ட அரங்குகளிலும் பிரயோகிக்கப்படுவதைப் போல கீழ்த்தரமாக காணப்படுவதாகவும் ஈரான் தளபதி விமர்சித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்