மாகாணசபைத்தேர்தலை நடத்துவது குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்கவேண்டும்- மகிந்த தேசப்பிரிய

மாகாணசபை தேர்தலை பழைய தேர்தல் முறையிலா அல்லது கலப்பு தேர்தல் முறையிலா நடத்துவது என்பது குறித்து நாடாளுமன்றம் தீர்மானிக்கும் வரை தேர்தல்கள் ஆணைக்குழு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாதென அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது,

“மாகாணசபை தேர்தலை புதிய கலப்பு முறையின் கீழ் நடத்த வேண்டுமென்றால் எல்லை நிர்ணய அறிக்கைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்க வேண்டும். பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டுமென்றால் தேர்தல் தொடர்பான புதிய சட்டம் அகற்றப்பட வேண்டும். இவ்விரு முடிவுகளையும் நாடாளுமன்றமே மேற்கொள்ள வேண்டும்.

மாகாண சபை தேர்தலின் இறுதி தீர்மானத்தை சபாநாயகர், பிரதமர் மற்றும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்ககேள எடுக்க வேண்டும்.

தேர்தல் ஆணையகம் நினைத்தால் தேர்தலை நடத்த முடியுமென சிலர் குறிப்பிடுகின்றனர். எனினும், நாடாளுமன்றத்தின் ஊடாக இறுதி தீர்மானம் எடுக்கும் வரை எம்மால் எதுவும் செய்ய முடியாது.

மாகாணசபை தேர்தல் ஒத்திவைக்கப்படுவது கவலை அளிக்கின்றது. தேர்தலை ஒத்திவைப்பது மிகவும் தவறான விடயமாகும்” என மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறியுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்