மனித இருப்புக்கு சவாலாகும் புற்றுநோய்-வைத்தியர் எம்.ரீ.அமீறா தெரிவிப்பு

இன்றைய நவீன யுகத்தில் உலகில் காணப்படும் முன்னணி தொற்றா நோயாக புற்றுநோய்கள் விளங்குகின்றன. இவற்றில் மார்புப் புற்று நோய், வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் என பல வகைகள் உள்ளன. இப்புற்று நோய்கள் அனைத்தும் மனித இருப்புக்கு பெரும் சவால் மிக்கவையாக விளங்கி வருகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது என்று அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வெளிக்கள வைத்தியர் எம்.ரீ.அமீறா தெரிவித்தார்.

“புற்று நோயிலிருந்து எம்மைப் பாதுகாப்போம்” எனும் தொனிப் பொருளில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு (26) அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் வைத்தியப் பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் தலைமையில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

புற்று நோய்கள் தொடர்பான அறிவுடன், வாழ்க்கை முறையையும் உணவுப் பழக்க வழக்கங்களையும் நாம் ஒவ்வொருவரும் ஒழுங்குமுறையாக பேணிக் கொண்டு வருவதுடன் புற்று நோய்கள் தொடர்பான அறிவும் தெளிவும் விழிப்புணர்வும் ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமானது. அவை பெரிதும் நன்மை பயக்கும் என்றால் அது மிகையாகாது.

குறிப்பாக புகைப்பிடித்தல், புகையிலை மற்றும் மதுப்பாவனையை முற்றாகத் தவிர்த்து ஒழுங்குமுறையான உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வந்தால் மூன்றிலொரு பங்கு புற்று நோய்களை ஆரம்பத்திலேயே தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அத்தோடு புற்று நோய்க்கான அறிகுறிகளை ஆரம்ப கட்டத்திலேயே இனம் கண்டு சிகிச்சை பெற்றால் மேலும் மூன்றிலொரு பகுதி புற்று நோய்களை முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ளலாம். அதன் காரணத்தால் உடலின் ஏதாவது ஒரு பகுதியில் வித்தியாசங்கள், உருவ மாற்றங்கள் தென்படுமாயின் தாமதியாது மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமானது என்று வலியுறுத்திக் கூறினார்.

மருத்துவ விஞ்ஞானம் புற்றுநோயை வெல்ல அநேக மருத்துவ முன்னேற்றங்கள் வந்துள்ளன. ”வரும்முன் நம்மை காப்பதும்” ஆரம்ப நிலையிலேயே சிறந்த சிகிச்சை பெறுவதும் நல்ல தீர்வாக அமையும். இருதய நோய்க்கு அடுத்து புற்று நோயால் ஏற்படும் உயிர் இழப்புகள் மிக அதிகமாக இருக்கின்றது. ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய் எளிதாய் குணப்படுத்தப்படுகின்றது. சில வகை புற்றுநோய்கள் அறிகுறிகள் இல்லாமல் உருவாகும். சில அறிகுறிகளை நாம் ஒன்றுமில்லை என்று ஒதுக்குவதும் நாம் செய்யும் பாரிய பிழையாகும். அதன் மூலம் நாம் பெரும் அபாயத்துக்கு ஆளாகி விடலாம்.

புற்று நோய் பரிசோதனைகள் அதனை கண்டுபிடிக்க எளிதாக்கும். பொதுவில் அதிக சிகரெட் பிடிப்பவர்கள், அதிக மது பழக்கம் உடையவர்கள் இரத்த உறவுகளில் புற்றுநோய் பாதிப்பு உடையவர்கள், மிக அதிகம் வெயிலிலேயே இருப்பவர்கள் கண்டிப்பாய் சில அறிகுறிகளை ஒதுக்கவே கூடாது. விடாது இருமல், எச்சிலில் சிறிது ரத்தம் இருந்தால் இந்த அறிகுறி சாதாரண கிருமி தாக்குதலாலும் ஏற்படக்கூடும்.

ஆயினும் நுரையீரல், தலை, கழுத்து இவற்றில் புற்று நோய் இருக்கும் அபாயமும் உண்டு. விடாமல் ஒரு மாதத்திற்கு மேல் இருமல், எச்சிலில் இலேசான இரத்தம் இருந்தால் உடனடியாக வைத்தியரை நாடி அதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.

புற்றுநோய் உள்ளவர்கள் குணமடைவதற்கு அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் மட்டுமல்லாமல், நல்ல ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவும் மிகவும் அவசியமானதாகும். அவர்களின் சிகிச்சைக் காலங்களில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணும் போதுதான் தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் வாழ முடியும். நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்பது காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உணவு முறையில் சேர்த்துக் கொள்வதே சிறந்ததாகும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்