தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நிரந்தர வீடுகளை பெற்றுத்தர கோரிக்கை

பெல்மோரா தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு தற்காலிக குடியிருப்புக்களில் வாழ்பவர்கள் நிரந்தர வீடுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு தற்போது தற்காலிக டென்ட் களிலும் தற்காலிக குடியிருப்புக்களிலும் வாழ்பவர்கள் நிரந்தர வீடுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த மாதம் 13 ம் திகதி குறித்த தோட்டத்தில் திடீர் தீ ஏற்பட்டத்தில் இந்த தொடர் குடியிருப்பில் வாழ்ந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 52 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த தீயினால் தொழிலாளர்களின் உடுதுணிகள், தங்க நகைகள் தளபாடங்கள் உட்பட இலத்திரனியல் உபகரணங்கள் அத்தியாவசிய ஆவணங்கள் உட்பட அனைத்தும் தீயில் கருகின.

இவ்வாறு தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோட்ட நிர்வாகத்தினால் தேவையான ஆரம்பகட்ட உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு சிலருக்கு தங்குவதற்கான வீடுகளை வழங்கியுள்ளதாகவும் மேலும் ஐந்து குடும்பங்கள் தற்காலிக குடியிருப்புக்களிலும் மூன்று குடும்பங்கள் கே.ஆர் சனசமூக நிலையத்திலும் ஒரு குடும்பம் பாலர் பாடசாலையிலும்; தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பத்தில் இவர்களுக்கு பல உதவிகள் கிடைத்த போதிலும் தற்போது அவை குறைந்துள்ளதாகவும் கடும் காற்று மற்றும் மழை காரணமாக மிகவும் அவதானத்துடன் வாழ்வதாகவும் தெரிவிக்கும் அதே வேளை சுமார் பத்துக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் தங்களது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது சிரமமப்படுவதாகவும் பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஆரம்பத்தில் உதவியது போல் தங்களுக்கு நிரந்த வீடுகளை பெற்றுக்கொடுக்க அரசியல் தலைவர்களும் தோட்ட நிர்வாகமும் முன்வர வேண்டுமென இவர்கள் மேலும் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்