மன்னாரில் போர்க் குற்றத்திற்கான சாட்சி.

யாழ் செம்மணி பிரதேசம், மன்னார் ஆகிய பகுதிகளில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள மனித எலும்பு கூடுகள் கடந்த கால அரசாங்கத்தின் உண்மைகளை வெளிப்படுத்தும் ஆதாரமாகவே காணப்படுகின்றது. இலங்கையில் இறுதிகட்ட யுத்தத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளமைக்கு இதுவே சிறந்த சாட்சி” என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“மன்னார் மனித புதைகுழி அகழ்வுக்கு போதிய நிதி காணப்படாமையின் காரணமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தேசிய அரசாங்கமும் உண்மையினை வெளிக்கொணர விரும்பவில்லை

யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகளை நெருங்கி வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் நிலங்களை எங்கு தோண்டினாலும் மனித எலும்புக் கூடுகளே கிடைக்கப் பெறுகின்றது .கலாச்சார பெருமை கொண்ட யாழ்ப்பாணம் இன்று புதைகுழியாக காட்சியளிக்கின்றது. மன்னார் மனித எலும்பு கூடுகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கிய முறிவுகள் காணப்படுகின்றது. சில எலும்புக் கூடுகள் குடும்ப உறுப்பினர்களே போன்று காட்சியளிக்கின்றது. அதவாது கட்டியணைத்தபடியான எலும்புக் கூடுகள், சிறுவர்களின் எலும்புகள் இவ்வாறு காணப்படுகின்றன.

இவர்கள் யார்? என்ற கேள்வி இன்று சர்வதேச ரீதியில் பேசப்படுகின்றது. ஆனால் அரசாங்கம் அமைதி காக்கின்றது. மீட்கப்படும் எலும்புகள் நிச்சயம் எம்மவர்களாகவே காணப்படுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. மன்னார் மனித புதைகுழியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள போதிய நிதி காணப்படாமையின் காரணமாக அகழ்வுப்பணிகள் கைவிடப்படும் நிலையில் காணப்படுகின்றது.

கிடைக்கப்பெறும் மனித எலும்பு கூடுகள் தொடர்பில் கடந்த அரசாங்கமே பொறுப்பு சொல்ல வேண்டும். மீட்கப்படும் எலும்புக் கூடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு பொறுப்புச் சொல்ல வேண்டும் . இதனை மூடி மறைக்கவே தேசிய அரசாங்கமும் இவ்விடயத்தில் மந்தகரமாகவே செயற்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மக்களுக்கு பிரத்தியேகமாக வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விடக் கூடாது.

போர்க் குற்றங்கள் இடம்பெற்றது என்று சர்வதேசங்கள் ஏற்றுக் கொண்டாலும் சில தரப்பினர் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். ஆகவே செப்ரெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இடம்பெறவுள்ள மனித உரிமை கூட்டத்தொடரில் இவ்விடயம் முன்னிலைப்படுத்தப்படும். தேசிய அரசாங்கமும் பொறுப்புக் கூறும் பொறிமுறையில் இருந்து பின்வாங்க முடியாது” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்