செட்டிகுளத்தில் மாடு தேடிச் சென்றவர் மீது தாக்குதல்

மாடு தேடிச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மீது செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில்  தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் மாடு ஒன்றினை காணவில்லை என அதனை தேடி மெனிக்பாம், பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள பகுதிக்கு  நேற்று காலை சென்ற போது குறித்த பிள்ளையார் ஆலயத்தில் கட்டட நிர்மாண வேலை செய்து கொண்டிருந்த அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் மாடு தேடிச் சென்ற குடும்பஸ்தர் மீது சராமரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனால் காயமடைந்த எஸ்.குலோந்திரன் (வயது 30) என்ற குடும்பஸ்தர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
மெனிப்பாம் பகுதியில் உள்ள சிவன் ஆலயம் ஒன்றின் காணி விவாகாரம் தொடர்பில் குறித்த இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்து வந்த நிலையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்