மீண்டும் போட்டியிட விக்கி விரும்பினால் எல்லோரையும் அரவணைக்க வேண்டும்! – செல்வம் அடைக்கலநாதன்

“வடக்கு மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரன் மீண்டும் களமிறங்க விரும்பினால் அவரையும் அரவணைத்துச் செல்லவேண்டும். இதுவே எங்கள் கட்சியின் நிலைப்பாடு.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
கரவெட்டிப் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற வெலிக்கடைச் சிறைச்சாலை படுகொலை நினைவு அஞ்சலிக் கூட்ட நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த செல்வம் அடைக்கலநாதனிடம், வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் செய்தியாளர்கள்  கேள்வி எழுப்பினர்.
“வடக்கு மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவின் பெயரை இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அடுத்த மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக அறிவித்தால் அவரை உதாசீனம் செய்யக்கூடாது. அவரையும் இணைத்து நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்படவேண்டும்.
விக்னேஸ்வரனை அவ்வளவு எளிதாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது. நாம் ஒற்றுமையாகத் தேர்தலை எதிர்கொள்ளவில்லையாயின் தென்னிலங்கை கட்சிகள் இங்கு வேரூன்றிவிடும்” – என்று செல்வம் எம்.பி. பதிலளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்