ஒரு நாள் தொடர் பங்களாதேஷ் வசம்

செயிண்ட் கிட்சில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற வங்காள தேசம் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

வங்காளதேசம் அணி மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வங்காளதேசமும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய அணியும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வென்ற வங்காளதேசம் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பாலும், அனமுல் ஹக்கும் களமிறங்கினர்.

அனமுல் 10 , ஷகிப் அல் ஹசன் 37, முஷ்பிகுர் ரஹிம் 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.. நிதானமாக ஆடிய தமிம் இக்பால் சதமடித்து அசத்தினார். அவர் 103 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்..

அடுத்து இறங்கிய மகமதுல்லா 67 ஓட்டங்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 301 ஓட்டங்கள் எடுத்தது.

மேற்கிந்திய அணி சார்பில் ஜேசன் ஹோல்டர், ஆஷ்லி நர்ஸ் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும், எவின் லெவிசும் இறங்கினர்.

லெவிஸ் 13 , கெயில் 73 ஓட்டங்ளில் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய ஷா ஹோப் 64 , ரோவ்மன் பாவெல் 74 ஓட்டங்கள் எடுத்தனர்.

மற்றவர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. இதனால் மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 283 ஓட்டங்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த வெற்றி மூலம் வங்காளதேசம் அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்