இரண்டாவது போட்டியிலும் வென்றது தென்னாபிரிக்கா

இலங்கை அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியின் இரண்டாவது போட்டி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 111 பந்துகளுக்கு 79, நிரோஷன் திக்வெல்ல 78 பந்துகளுக்கு 69 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

 

245 என்ற வெற்றி இலக்கினை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் டீகொக் மற்றும் அம்லா ஜோடி சிறந்த அடித்தளத்தை இட்டது. அதனுடன் இலங்கை அணியின் மோசமான களத் தடுப்பும் இரண்டு பிடி நழுவல்களும் தென்னாபிரிக்க அணியின் ஓட்ட அதிகரிப்புக்கு மேலும் வலுச் சேர்த்தது.

ஒரு கட்டத்தில் 14 ஓவர்களை எதிர்கொண்ட இந்த ஜோடி 91 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது அகில தனஞ்சயவின் பந்து வீச்சினால் ஹஸீம் அம்லா 43 பந்துகளுக்கு 43 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது ஆட்டமிழந்து வெளியேற 14.2 ஓவரில் இவருக்கு பக்க பலமாக துடுப்பெடுத்தாடிய டீகொக் 43 பந்துகளை எதிர்கொண்டு அரைச் சதம் விளாச 15 ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஐ கடந்தது.

ஹஸீம் அம்லாவின் ஆட்டமிழப்பினையடுத்து களமிறங்கிய மர்க்ரம் வெகு நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் மூன்று ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் டூபிளசிஸ் டீகொக் இணைந்து 53 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட வேளை டீகொக் 87 ஓட்டங்களுடன் ராஜிதவின் பந்து வீச்சில் லக்மலிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து களம்புகுந்த மில்லரும் மூன்று ஓட்டங்களுடன் சுரங்க லக்மலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் 33 ஆவது ஒவரின் போது தென்னாபிரிக்க அணி ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை கடந்தது.

இறுதியாக தென்னாபிரிக்க அணி 42.5 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி நிர்ணயித்த வெற்றி இலக்கினை கடந்தது.

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் அகில தனஞ்சய 60 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களையும் சுரங்க லக்மால், கசூன் ராஜித மற்றும் திஸர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாபிரிக்க அணியின் டீகொக் தெரிவானார்.

இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் தென்னாபிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2:0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.

இவ் இரு அணிகளுக்குமான மூன்றாவது போட்டி நாளை 03 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்