பானைக் கரியைக் கறுப்பெனும் முதல்வர் விக்கினேஸ்வரன் !

நம்ம மூதாதையர் ஒரு பழமொழி சொல்வர், ”பானைக் கரியைப் பார்த்து சட்டி கறுப்பு எண்டதாம்” என்று. எங்கடை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவின் இந்த வார கேள்வி பதிலைப் பார்த்ததும் எனக்கு சட்டென்று இந்தப் பழமொழிதான் மூளையில் பட்டது.

வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஐயா, ”மாட்டேன், மாட்டேன்”’ என்று கதற, சம்பந்தர் ஐயாவும் சுமந்திரன் ஐயாவும் விடாப்பிடியாய் குறை இழுவையாய் இழுத்துக்கொண்டுவந்து ”ஒபாமாவோடும் விளாடிமிர் புடினோடும் சரிநிகர் சமானமாகக் ஒரே மேசையில் அமரும் தகுதி பெற்றவர் இவரே!” எனத் தமிழ்மக்களுக்குப் படம் பிடித்துக் காட்டினர். பல தியாகங்களைச் செய்த மாவை ஐயா, இதிலும் தன்னிலும் மூத்த அரசியல்வாதியாகிய சம்பந்தர் ஐயாவின் சொல்லுக்கு மதிப்பளித்து, கட்டுப்பட்டு, அவரது கௌரவத்தைக் காப்பதற்காகப் பெரும் தியாகத்தைச் செய்தார்.

”நான் மாட்டேன், நான் மாட்டேன்” என்று அடம்பித்து, சற்றும் விருப்பற்று அரசியலுக்குள் வந்த விக்கி ஐயா, அரசியல் அதிகாரத்தை ரசித்து, சலுகைகளை ருசித்து, ஆன்மீகபேரானந்தத்தை விட, அரசியல் சிற்றின்பம் நாம் வாழும் இந்தக் காலத்துக்கு உகந்தது என நினைந்து, இன்று அவரைக் கொண்டுவந்தசம்பந்தன், மாவை, சுமன் நீங்கள் இனி வயதாகிவிட்டது ஓய்வெடுங்கள் என்றாலும், அரசியல்போதை தலைக்கேறி, பதவிமோகம் பிடித்து அதிலிருந்து விடுபடமாட்டாதவராய் அரை மயக்கத்தில் உழலுகிறார்.

நான் இத்தனையும் இவரைப்பற்றிக் குறிப்பிட்டமைக்கு நல்ல எடுத்துக்காட்டு அவரது இந்தவார கேள்வி – பதில் ஆகும். அதில் அவர் மாவை – சுமந்திரன் ஆகிய இருவரும் வடக்கு மாகாண முதல்வர் ஆகத் தகுதியற்றவர்கள் என்கிறார். அவர் குறிப்பிட்ட இந்த இருவரும் சாமானியமானவர்கள் அல்லர். ஒருவர் தமிழரசுக் கட்சி அஹிம்சைப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் தந்தை செல்வாவோடு கூடவே இருந்து இளைஞனாக வாலிப முன்னணி – இளைஞர் பேரவை – உறுப்பினராக இருந்து, அதன் தலைவராகி, பல சத்தியாக்கிரகப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தி, பலமுறை சிறைசென்றவர். இந்த மண்ணில் தன்னுடைய வியர்வையையும் குருதியையும் எமது இனத்துக்காகச் சிந்தியவர். இன்று கூட்டமைப்பில் உள்ள அரசியல் வாதிகளுள் சம்பந்தர் ஐயாவுக்கு அடுத்தபடியாக முதன்மையானவராக உள்ளவரும் இவரே!

மற்றையவர் அரசியலில் புதியவர் என்றாலும் இந்தக் கருத்தைக் குறிப்பிடும் விக்கி ஐயாவை விட அரசியலில் பழுத்தவர். விக்கி அரசியலுக்கு வரக் காரணனானவர். கிட்டத்தட்ட இவர் விடயத்தில் விக்கி ”ஏறிய ஏணியை எட்டி உதைந்த” கதைதான். இன்றைக்கு கூட்டமைப்பின் அரசியல் காய்நகர்த்தலில் முக்கிய பங்கு வகிப்பவரும் இவரே! சட்டவியலாளர்! சாணக்கியம் மிக்கவர்!

இப்பேர் பட்ட வடமாகாணத்தை ஆளுவதற்குத் தன்னைவிடத் தகுதியுடைய இந்த இரு தமிழ்த் தலைமைகளையும் இருவரும் தகுதியற்றவர்கள் என்று குறிப்பிடுவதற்கு விக்கிக்கு என்ன யோக்கியதை உண்டு?. இது புத்தி பேதலித்து, ”விநாச காலே விபரீத புத்தி” என்றாகி அரசியல் சுகபோக போதை தலைக்கேறியதன் விளைவேயன்றி வேறில்லை என்றே குறிப்பிடலாம்.

வடக்கு மாகாணத்தில் ஒரு தனிமனிதனின், சமூகத்தின், பிரதேசத்தின், மாவட்டத்தின் ஏன் ஒட்டுமொத்த வடக்கு மாகாணத்திலையே என்ன நடக்குது என்று தெரியாத முதல்வர் ஐயா, வெறும் பத்திரிகை அறிக்கை அரசியலை மட்டும் செய்துகொண்டு, தான் விட்ட சகல நிர்வாக முறைகேடுகளுக்கும் ஆளுநரைப் பழிசுமத்திக்கொண்டு போலி வாழ்க்கை வாழ்வதுதான் மாகாண முதல்வருக்குரிய தகுதி என்று எண்ணுகின்றார் போலும்.

மாவை, சுமன் இருவரும் முதல்வர் கதிரைக்குத் தகுதியற்றவர்கள் என்பதற்கு முதல்வாவிக்கி பத்து காரணங்களைக் குறிப்பிடுகின்றார்.

முதலாவது – மக்களை மாக்களாகப் பார்ப்பவர்கள் இந்தப் பதவிக்குத் தகுதியற்றவர்கள். நல்லவிடயம், முதல்வர் மக்களை மக்களாகவா பார்க்கின்றார்? நான் அண்மையில் முதல்வரைச் சந்திக்கச் சென்றேன். போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில் டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி போன்றவர்கள் என்ன பாதுகாப்போடு இருந்தார்களோ, அவர்களைச் சந்திக்க நாம் எவ்வளவு சிரமப்பட்டோமோ இன்று அதே உணர்வு முதல்வரைச் சந்திக்கச் சென்றால் எமக்கு ஏற்படும். அவ்வளவு கடினமானது அவரைச் சந்திப்பது.

இரண்டாவது – சிறந்த நிர்வாகம் தெரிந்தவராக இருக்கவேண்டும். நல்ல விடயம். நாடாளுமன்ற உறுப்பினராக யாரும் வரலாம் 100 இல் 101 ஆக இருந்து கத்தலாம். ஆனால், முதல்வராவதற்கு வடக்கு மாகாணத்தையே நிர்வகிக்கின்ற ஆளுமை தேவை. அது உண்மைதான். ஆனால், முதலில் இந்த விடயத்தைக் குறிப்பிட்ட விக்கி ஐயாவுக்கு அது இருக்கின்றதா? வடக்கு மாகாண சபையில் 415 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனவே! எத்தனை நடைமுறைக்கு வந்தன? இன்றைக்கு வரைக்கும் – வடக்குமாகாணசபை ஆட்சிப்பீடமேறி ஐந்தாண்டுகளில் – தமது மாகாணத்துக்கு ஒரு கொடிக்கீதத்தை இயற்றத் துப்பில்லாமல், சகல நிகழ்வுகளிலும் பிரதம விருந்தினராகச் சென்று சிங்கக் கொடியைத் தொடமாட்டோம் என்று வெற்று வீறாப்புப் போடும் முதல்வரும் 40 திருடர்களும் என்னத்தைச் சாதித்துக் கிழித்தார்கள்? ஓ! முதல்வரின் நிர்வாகச் சீத்துவம் அவரது அமைச்சரவை நியமிப்பிலிருந்து மக்களுக்குப் புரியும் அல்லவா! இவரது இந்தக் கருத்து, ”கூரையேறி கோரைச் சுரக்காய் அறுக்கத்தெரியாத குருக்கள்தான் வானத்தைக் கீறி வைகுண்டம் காட்டப் போராராம்” என்ற மாதிரியெல்லோ கிடக்கு.

மூன்றாவது – சகலரையும் கற்றறியும் திறன் கொண்டவராக இருக்கவேண்டும். தனது அமைச்சரவையையே கற்றறிந்து கள்வர் யார்? நல்லவர் யார் என்று அறியும் திறனற்ற முதல்வர் சாதாரண மக்களை எவ்வாறு கற்றறியப் போறாராம்.

நான்காவது – வெளிநாட்டுப் பிரதிநிதிகள் யார் வந்தாலும் அவர்களுக்குப் புரியும் மொழியில் அவர்களது எமது மாகாண மக்கள் பிரச்சினைகளைப் புரியவைக்கவேண்டும். இது உண்மையில் நல்ல கருத்து. ஐயாவை சம்பந்தன் ஐயாவும், சுமந்திரனும் கொண்டுவரேக்கை இதை எதிர்பார்த்துத்தான் கொண்டுவந்தார்கள். வந்த ஐயா இந்த ஐந்தாண்டுகளில் வெளிநாட்டுக் காரரிட்டை அவைக்குப் புரிகின்ற மொழியில் குறிப்பிட்டு என்னத்தை சாதித்தார்? பின்பு எதற்கு இந்தத் தகைமை?

இவ்வாறு தனக்கில்லா தகுதிகளாக இன்னும் 6 காரணங்களை முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இவர் குறிப்பிட்ட தகுதிகள் உண்மையில் போரால் நொந்து துவண்ட வடக்கை ஆள்பவருக்குத் தேவைதான். அதை இல்லை என்று எவரும் மறுத்தல் ஆகாது. ஆனால், இந்தத் தகுதிகள் மாவை, சுமந்திரனோடு தன்னையும் சேர்த்து தம் மூவருக்கும் உள்ளனவா என்று முதல்வர் பரிசீலிப்பாராயின் நன்று. இதைச் செய்வாரா முதல்வர் விக்கி?

தெல்லியூர் சி.ஹரிகரன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்