தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா 78 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை 2 போட்டிகள் எஞ்சிய நிலையில் தென்னாபிரிக்கா 3 – 0 என கைப்பற்றியது.

கண்டி பல்லேகலையில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 363 ஓட்டங்களைப் பெற்றது.

இது பல்லேகலை மைதானத்தில் ஒருநாள் போட்டியொன்றில் ஓர் அணி பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகப் பதிவானது.

ஒருநாள் போட்டியொன்றில் இலங்கை அணிக்கு எதிராக தென்னாபிரிக்கா பெற்ற மூன்றாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையும் இதுவாகும்.

தனது அறிமுக சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய ரீஷா ஹன்ரிக்ஸ் சதம் விளாசிய நிலையில் 102 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் அறிமுகப் போட்டியில் சதம் விளாசிய மூன்றாவது தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

இதற்கு முன்னர் தென்னாபிரிக்கா சார்பில் கொலின் இங்ரம் மற்றும் டெம்பா பவுமா ஆகியோர் அறிமுகப் போட்டியில் சதம் விளாசியுள்ளனர்.

ஹாசீம் அம்லா , ஜுயோன் போல் டுமினி மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் அரைச்சதமடித்தனர்.

திஸ்ஸர பெரேரா 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 81 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்களையும் இழந்தது.

அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் 32 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

ஏழாவது விக்கெட்காக இணைந்த அகில தனஞ்சய மற்றும் தனஞ்சய டி சில்வா ஜோடி 95 ஓட்டங்களை பகிர்ந்து சற்று நம்பிக்கையூட்டியது.

அகில தனஞ்சய 37 ஓட்டங்களை ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

அதிரடியாக விளையாடிய தனஞ்சய டி சில்வா 66 பந்துகளில் 84 ஓட்டங்களை விளாசினார்.

இலங்கை அணி 45 தசம் இரண்டு ஓவர்களில் 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

ரீஷா ஹன்ரிக்ஸ் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை வென்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்