சாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு மறைந்து விட்டார்!

தமிழ் நாட்டின் வரலாற்றில் ஐந்துமுறை முதலமைச்சராகவும் 1957 ஆம் ஆண்டு தொடக்கம் சட்ட சபைத் தேர்தலில் 13 முறை வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 49 ஆண்டுகளும் அரசியலில் 80 ஆண்டுகளும் ஓய்வின்றி ஒழிதலின்றி இரவு பகலாக உழைத்த கலைஞர் கருணாநிதி நிரந்தர ஓய்வு பெற்றுவிட்டார். நீள் துயிலில் ஆழ்ந்து விட்டார்.

“ஓய்வு எடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுத்துக் கொண்டுள்ளான்” என்ற வாசகம் அவரது கல்லறையில் எழுதப்படவுள்ளது. அண்ணாவின் நினைவிடத்தில் “எதையும் தாங்கும் இதயம் இங்கே தூங்குகிறது” என எழுதி வைத்தவர் கருணாநிதி. அண்ணா இறந்த போது கலைஞர் கருணாநிதி எழுதிய இரங்கல் பாவில்,

இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?

என வாஞ்சையோடு பதிவு செய்திருந்தார். இன்று கலைஞர் கருணாநிதியின் ஆசை நிறைவேறியுள்ளது. மெரினாவில் எழுப்பப்பட்டுள்ள அண்ணாவின் நினைவிடத்தில் அவரது பூதவுடல் விதைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த முதலமைச்சருக்கும் கொடுக்கப்படாத மரியாதையை இந்திய மத்திய அரசு கலைஞர் கருணாநிதிக்கு வழங்கியுள்ளது.

இந்திய நாட்டின் மூவர்ண தேசியக் கொடி நாடு முழுவதும் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து கலைஞர் கருணாநிதியின் பூதவுடலுக்குத் தனது இறுதி வணக்கத்தை செலுத்தியுள்ளார்.

கலைஞர் கருணாநிதி பன்முக ஆளுமை கொண்ட ஒக்காரும் மிக்காரும் இல்லாத பெருந் தலைவர்.

அரசியல், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்க் கலை, தமிழ்ப் பண்பாடு, பகுத்தறிவு, சமூக நீதி, சாதி ஒழிப்பு, பின்தங்கிய சாதியினருக்கு கல்வியில் அரச பணியில் ஒதுக்கீடு என்று பலதுறைகளில் முத்திரை பதித்தவர்.

கலைஞர் கருணாநிதி மாநில அரசுகளின் உரிமைகளுக்கு ஓங்கிக் குரல் கொடுத்தவர். மாநிலங்களுக்கு இணைப்பாட்சி அடிப்படையில் கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனப் போராடியவர். சுதந்திர விழாக்களில் தேசியக் கொடியை ஆளுநர்களுக்குப் பதில் மாநில முதலமைச்சர்கள் ஏற்றி வைக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுத்த சாதனையாளர்.

கலைஞர் கருணாநிதியின் ஆட்சி இருமுறை (1976, 1991) சட்ட விதி 356 இன் கீழ் கலைக்கப்பட்டது. வேறு எந்தக் கட்சியின் ஆட்சியும் இப்படி இரண்டுமுறை கலைக்கப்படவில்லை.

கலைஞர் கருணாநிதி தனது ஆட்சியில் சென்னையில் வள்ளுவருக்கு கோட்டம் எழுப்பினார், குமரிமுனையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவினார், பூம்புகார் நகரை உருவாக்கினார்.

தெற்காசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய நூலகம் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா அதை இயங்கவிடாமல் செய்து விட்டார்.

கலைஞர் கருணாநிதி மொத்தம் 13 பல்கலைக்கழகம், 4 மருத்துவக் கல்லூரி, 5 சட்டக் கல்லூரி, 3400 உயர் நிலை பள்ளிகள், 350 மேம்பாலங்கள், Tidel park , மெட்ரோ ரயில், சென்னை பன்னாட்டு விமான நிலையம் ஆகியவற்றை உருவாக்கினார்.

கலைஞர் தனது ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை, சமசீர் கல்வி, பின்தங்கிய வகுப்பாருக்கு இட ஒதுக்கீடு, அருந்ததியினருக்கு இட ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை, பெண்களுக்கு இட ஒதுக்கீடு, சமத்துவபுரம் போன்ற திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

ஒரு கல்லூரிப் பேராசிரியர் பெற்றிருக்கும் தமிழ் அறிவைவிட கலைஞர் கருணாநிதி அதிகம் பெற்றிருந்தார். அவர் படித்தவை, உணர்ந்தவை இவை அனைத்துமே தொல்காப்பியப் பூங்காவாக, சங்க இலக்கியமாக, குறளோவியமாக, ரோமாபுரிப் பாண்டியனாக, பாயும் புலி பண்டாரக வன்னியனாக, திருக்குறள் உரையாக இன்னும் பலவாகத் தமிழர்களின் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கின்றன.

திரையுலகில் புரட்சிகர மாற்றத்தை கொண்டு வந்தவர். திரைப்படம் மூலம் சாதி ஒழிப்பு, மூட பக்தி ஒழிப்பு, பெண்ணுரிமை போன்றவற்றில் கொண்டுவந்தவர்கள் இருவர். ஒருவர் அறிஞர் அண்ணா. மற்றவர் கலைஞர் கருணாநிதி. அவரது பராசக்தி திரையுலகில் வரலாறு படைத்தது. தமிழ் கொஞ்சி விளையாடியது. பகுத்தறிவு பளிச்சிட்டது.


பராசக்திக்குப் பின்னரே திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதுபவர்களின் பெயர் கொட்டை எழுத்தில் காட்டப்பட்டது.

கலைஞர் கருணாநிதியின் கனவுகளில் ஒன்றான தை முதல் நாளே தமிழர்களது புத்தாண்டின் தொடக்கம், அந்த நாளே திருவள்ளுவர் பிறந்த நாள், அதுவே திருவள்ளுவர் தொடர் ஆண்டு என 2008 ஆம் ஆண்டு சட்டம் இயற்றியவர். ஜெயலலிதா ஆட்சியில் அந்தச் சட்டம் நீக்கப்பட்டாலும் இன்று உலகளாவிய தமிழர்கள் தை முதல் நாளை – தைப்பொங்கல் திருநாளை முப்பெரும் விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

கலைஞர் கருணாநிதியின் இன்னொரு சாதனை அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அவர் தமிழக சட்ட சபையில் இயற்றிய சட்டம். இந்த ஆண்டில் அர்ச்சகர் பயிற்சி பெற்று வெளியில் வந்த ஒரு தமிழர் மதுரைக் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். இது மகிழ்ச்சியான செய்தி.
கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது ஒரு இலட்சம் தமிழீழ ஏதிலிகளுக்கு கல்வி, குடியிருப்பு போன்ற பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

கலைஞர் கருணாநிதி எத்தனையோ காட்டாறுகள், எண்ணற்ற நெருப்பாறுகள், கணக்கிலடங்கா இரண்டகங்கள், பலத்த நெருக்கடிகள், அதிசயிக்கத்தக்க வெற்றிகள், அதல பாதாளத்தில் தள்ளிய தோல்விகள் என இவை அனைத்தையும் கடந்து 50 ஆண்டுகளாக திமுக வை தலைமையேற்று நடத்தி வந்ததிருக்கிறார். அவர் மூன்று தலைமுறை கண்ட சாதனையாளர். அவர் நிறைவாக வாழ்ந்து தனது 94 ஆவது அகவையில் புகழோடு மறைந்து விட்டார்!

கலைஞர் கருணாநிதியை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தார், உற்றார் உறவினர்கள், திமுக தலைவர்கள், தொண்டர்கள் எல்லோருக்கும் எமது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் (கனடா)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்