கனடாவில் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 23வது ஆண்டு ஒன்றுகூடல்

வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடாவின் 23வது வருடாந்த ஒன்றுகூடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆவணி மாதம் 5ம் திகதி) Scarborough Milliken Park இல் நடைபெற்றது. கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர் சின்னையா மற்றும் முன்னாள் ஆசிரியை திருமதி குளோரியா டேவிட் ஆகியோர் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்குச் சங்கத்தின் தலைவர் சி. இளஞ்செழியன் அவர்கள் தலைமை தாங்கினார். வழமைபோல் பழைய மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்து கொண்டு அன்றைய பொழுதை இன்பமாய்க் கழித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதம விருந்தினராக அமெரிக்காவில் வதியும் பழைய மாணவர் உமாகாந்தன் கனகரட்ணம், சிறப்பு விருந்தினராகக் கலாநிதி லக்ஷ்மன் டேவிட், கௌரவ விருந்தினராக முன்னாள் ஆசிரியை திருமதி சத்தியபாமா சண்முகநாதன் (தியாகராஜா ரீச்சர்) குடும்ப சமேதரராக வருகைதந்து சிறப்பித்தனர். கல்லூரியின் பழைய மாணவிகள் திருமதிகள் கலா செல்வம்; தயா பொன்னம்பலம், கவிதா காந்தன் ஆகியோரது கல்லூரிக்கீதத்துடன் ஆரம்பித்த நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினர் திருமதி சத்தியபாமா சண்முகநாதன் அவர்கள் சங்கக் கொடியை ஏற்றினார். அடுத்து விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின.

விளையாட்டு நிகழ்ச்சிகளை ப. ஜெயச்செல்வன் திருமதிகள் சுலோ கந்தவேள் சாந்தி குகதாசன், மங்களகௌரி சௌந்தரநாதன் ஜீவன் ஆகியோர் மிகச்சிறப்பாக நெறிப்படுத்தினர். நாள் முழுவதும் பல வகை உணவுகள் வழங்கப்பட்டுக்கொண்டே இருந்தது. குறிப்பாக சைவ அசைவ ஒடியற்கூழ் ஆட்டிறைச்சிக்கறி சாம்பாறு சாதம் சோளம் ஐஸ் கிறீம் மேலும் சுவையகம் தயாரித்து வழங்கிய தந்தூரிச்சிக்கன் போன்றவற்றை அனைவரும் மீண்டும் மீண்டும் விரும்பி ரசித்துச் சுவைத்ததுடன் உணவுத் தயாரிப்புக் குழுவினரையும் உணவுப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சங்கத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களையும் வெகுவாகப் பாராட்டியவண்ணம் இருந்தனர்.

மாலை நேரப் பரிசளிப்பு நிகழ்ச்சியில் தலைவர் தனதுரையில் சங்கம் கடந்த ஏழரை ஆண்டுகளாகச் செய்துவரும் அர்த்தமுள்ள செயற்திட்டங்கள் எல்லாம் கையேடாக வழங்கப்பட்டுள்ளதென்றும் இந்த வருடம் கல்லூரி அதிபர் திரு சி. கிருபாகரன் அவர்களுக்கு தீவக வலயக் கல்விப் பணிப்பாளரினால் ஏற்படுத்தப்பட்ட தடங்கல்களையும் அவற்றை முறியடிப்பதற்குச் சங்கம் எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.. திருமதி சண்முகநாதன் அவர்கள் தனதுரையில் சங்கத்தின் செயற்பாடுகளினால் கல்லூரி மீண்டும் பழையநிலையை வெகுவிரைவில் அடையும் என அழகாக எடுத்துரைத்தார். திரு லக்ஷ்மன் அவர்கள் பழைய மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று வருவதுடன் அங்கு தற்போது கல்விகற்கும் மாணவர்ளிடம் கலந்து பேசி அவர்களின் தேவைகளையறிந்து அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்பதுடன் மாணவர்களின் ஒழுக்கத்திலும் அக்கறை காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திரு உமாகாந்தன் அவர்கள் பழையமாணவர்கள் அனைவரும் அதிபருக்கு ஆதரவாகச் செயற்படவேண்டும் என கேட்டுக் கொண்டதுடன் மாணவர்களுக்குக் கணினி அறிவைப் பெருக்கக் கூடிய செயற்திட்டங்களுக்குத் தன்னாலான உதவிகளை வழங்குவதாகவும் கூறினார். மேலும் சங்கத்தின் செயற்பாடுகள் அனைவருக்கும் ஊக்கம் தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்றும் இந்தநிலை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்றும் பேச்சாளர்கள் அனைவரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறினர். உயர் வெப்பநிலை எச்சரிக்கை அறிவிப்புக்களால் பங்குபற்றியோரின் எண்ணிக்கையில் சிறிது வீழ்ச்சி காணப்பட்டது. இருப்பினும் நல்லதோர் நிகழ்வை ஒழுங்கு செய்த நிர்வாகத்தைப் பங்குபற்றிய அனைவரும் பாராட்டிச் சென்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்