வீட்டுக்கு வந்த நபரை உலக்கையால் அடித்து கொலை செய்த நபர்! இளஞ்செழியன் கொடுத்த கடுமையான தீர்ப்பு

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாலியபுர பகுதியில் டெங்கு பார்ப்பதற்காக வீடுகளுக்கு சென்ற நபரை உலக்கையால் அடித்து கொலை செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்றில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

தம்பலகாமம், சாலியபுர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய செனரத் முதியன்சலாகே ரெஜினோல் வெல்கம என்பவருக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

2012ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 09ஆம் திகதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று சர்வோதயத்தினால் வழங்கப்பட்ட நுளம்பு வலைகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளித்து விட்டு சாலியபுர பகுதியிலுள்ள வீடுகளுக்கு டெங்கு சோதனைகளை மேற்கொள் சென்றுள்ளனர்.

இதன்போது வீடொன்றினை சோதனையிடுவதற்கு வீட்டு உரிமையாளரை அழைத்த போது “மொன டெங்கு பலன்டத ஆவே? (என்ன டெங்கு பார்க்க வந்தாய்?)” எனக் கேட்டு வீட்டு உரிமையாளர் பொதுச் சுகாதார பரிசோதகரை உலக்கையால் அடித்துள்ளார்.

இதில் குறித்த பொதுச் சுகாதார பரிசோதகர் அவ்விடத்திலேயே உயிரிழந்ததாகவும், அவரது உடம்பில் ஆறு காயங்கள் காணப்பட்டதாகவும் சட்ட வைத்திய நிபுணர் மன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இக்கொலையை கைமோசக்கொலை (ஆட்கொலை) குற்றம் என குறிப்பிட்டு குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் கட்ட தவறும் பட்சத்தில் மூன்று மாத கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்