மனித எலும்புக்கூடு அகழ்வு தொடர்பான கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி!

மன்னாரில் மனித எலும்புகள் அகழ்வுப் பணியின்போதான செய்தி சேகரிப்புக்கு, ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) சட்டத்தரணிகள் ஊடாக பிரேரணை ஒன்றை மன்னார் ஊடகவியலாளர்கள் தாக்கல் செய்ததைத் தொடர்ந்தே இந்த அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது ஊடகவியலாளர்கள் அங்கு சென்று புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்தல் தடை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட நீதிமன்றம் கடந்த 7ஆம் திகதி கட்டளை பிறப்பித்திருந்தது.

இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களான எஸ்.ஆர்.லெம்பேட் மற்றும் பெலிஸ்டஸ் பச்சேக் ஆகியோர் சிரேஷ்ட சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.

அதனைத் தொடர்ந்து நீதிமன்ற நீதவான் ரீ.ஜே.பிரபாகரன் அதனை ஏற்றுக்கொண்டு மன்னார் சதொச வளாகத்தில் இடம்பெறும் அகழ்வுப் பணியின் செய்தி சேகரிப்புக்கு அனுமதியளித்தார்.

இவ்விடயம் தொடர்பாக சிரேஷ்ட சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவிக்கையில், ”மன்னார் ஊடகவியலாளர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட நகர்தல் விண்ணப்பத்தை மன்னார் நீதவான் ரீ.ஜே.பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருந்தார். என்னுடன் சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வர், ஜெபநேசன் லோகு, செல்வராசா டினேசன் ஆகியோர் ஊடகவியலாளர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது குறித்த கட்டளையில் தவறுதலான விடயம் இடம்பெற்றுள்ளதை சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர். அதற்கமைவாக குறித்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவரும் பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஊடகவியலாளர்கள் செல்லலாம் என்றும் ஊடகவியலாளர்கள் எந்தவித இடையுறுகளும் இன்றி செய்தி சேகரிப்பது அவர்களுடைய உரிமை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் குறித்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு இடம்பெறும் இடத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரியின் அனுமதியுடன் அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்த பகுதியில் தமது கடமையைச் செய்யமுடியும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்