இத்தாலியில் அனர்த்தத்திற்கு உள்ளான பாலத்தை அமைத்த நிறுவனத்திடமிருந்து நட்டஈடு!

இத்தாலியில் கடந்த வாரம் இடிந்து வீழ்ந்த பாலத்தை அமைத்த நிறுவனமே, அப்பாலத்தை மீண்டும் அமைப்பதற்கான செலவினை ஏற்க வேண்டுமென அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இத்தாலியின் ஜெனோவா நகரத்தில் கடந்த வாரம் பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் 39 பேர் வரை உயிரிழந்ததோடு, சுமார் 15 பேர் வரை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 12 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், போக்குவரத்து அமைச்சு விசாரணையை மேற்கொண்டுள்ளது.

இத்தாலியிலேயே பாரிய உட்கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனமான ஒட்டோஸ் டிரேட் (Autostrade) என்ற நிறுவனமே அனர்த்தத்திற்கு இலக்கான பாலத்தை கட்டியுள்ளது.

பாலத்தின் கட்டுமானப் பணி வேலைகளுக்கான திட்ட வரைபடம் மற்றும் ஆவணங்களை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு குறித்த நிறுவனத்திடம் அமைச்சு கேட்டிருந்தது. அதற்கு, பாதுகாப்பான முறையிலேயே குறித்த பாலம் அமைக்கப்பட்டுள்ளதாக ஒட்டோஸ் டிரேட் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விசாரணையின் இறுதித் தீர்மானம், கட்டுமானப் பணியை மேற்கொண்ட நிறுவனத்திற்கு எதிராக அமைந்தால் 150 மில்லியன் யூரோ நட்டஈடும் பாலத்தினை மீண்டும் தரமான வகையில் அமைக்கும் செலவினையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்