மன்னாரில் பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் ஆரம்பம்

(மன்னார் நிருபர்)

உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் அனுசரணையுடன் வடக்கு மாகாண கல்வி அமைச்சும் வடக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த பாடசாலைகள் மட்ட தேசிய பூப்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்ளும் வடமாகாண பாடசாலை அணிகளுக்கான வதிவிட பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் இன்று வெள்ளிக்கிழமை(24) காலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக அரங்கில் ஆரம்பமாகியது.

இன்று வெள்ளிக்கிழமை(24) காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த வதிவிட பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை(26) மாலை வரை இடம் பெறவுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் கலந்து கொண்டு பூப்பந்தாட்ட பயிற்சி முகாமை ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது பயிற்றுவிப்பாளர்களாக உலக தமிழர் பூப்பந்தாட்ட கனடா கிளையின் தலைவர் ஜெயகாந்தன் கலந்து கொண்டார்.மேலும் மன்னார் மாவட்ட பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் அருட்சகோதரர் ஏ.மனோ, உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மன்னார் அணிகள் 3,வவுனியா அணிகள் 2, கிளிநொச்சி அணி 1 , யாழ்ப்பாண அணிகள் 6 உள்ளடங்கலாக வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 12 அணிகளைச் சேர்ந்த 80 வீர வீராங்கனைகள் குறித்த வதிவிட பூப்பந்தாட்ட பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்