உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் வெற்றிக்கிண்ணப்பயணம் ஆரம்பம்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சம்பியனாகும் அணிக்கு பரிசளிக்கப்படும் வெற்றிக் கிண்ணத்தை உலகம் முழுவதும் எடுத்துச்செல்லும் பயணம் நேற்று  ஆரம்பமானது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மிக முக்கிய தொடர்களில் ஒன்றாக உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் கருதப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை இங்கிலாந்தும் வேல்ஸும் இணைந்து நடத்தவுள்ளன.

இந்நிலையில், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சம்பியனாகும் அணிக்கு பரிசளிக்கப்படும் வெற்றிக்கிண்ணத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் பயணம், துபாயில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமை அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

வரலாற்றில் முதல்தடவையாக கிரிக்கெட் அங்கத்துவம் இல்லாத நாடுகளுக்கும் உலகக் கிண்ணம் எடுத்துச்செல்லப்படவுள்ளது.

அதன்படி அமெரிக்கா, ஜேர்மன், ருவண்டா, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட 11 நாடுகளுக்கு உலகக்கிண்ணம் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

அதற்கு மேலதிகமாக இந்த வெற்றிக்கிண்ணம், 21 நாடுகளின் 60 முக்கிய நகரங்களுக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

அபுதாபியில் ஆரம்பமாகவுள்ள பயணம், ஓமான், அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் இந்தியா, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா ஊடாக தென்னாபிரிக்காவை அடையவுள்ளது.

குறித்த வெற்றிக்கிண்ணம், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதோடு, 24 மற்றும் 27 ஆம் திகதிகளில் ஹிக்கடுவை மற்றும் காலியிலும் ரசிகர்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளது.

அத்தினங்களில் இலங்கை ரசிகர்களுக்கு கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை நேரில் பார்வையிடும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் உலகக்கிண்ணம் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி இங்கிலாந்துக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.

அடுத்த வருடம் மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்