மைத்திரியிடம் கூட்டமைப்பினரின் கோரிக்கைகள்.

புல்லுமலையில் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி முதற்தடவையாக ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 30ஆம் திகதி இடம்பெற்றதுடன், அப்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக நேற்று முன்தினம் மீளாய்வு செய்யப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கயந்த கருணாதிலக, டீ.எம்.சுவாமிநாதன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளும், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம,வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் பீ.சிவஞானசோதி, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையின் பிரதானிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிடும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மேற்கண்டவாறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.

மேலும்,

1.புல்லுமலையில் அமைக்கப்படும் குடிநீர் போத்தல் தொழிற்சாலையை நிறுத்துமாறு கூறியதுடன் அது தொடர்பான மகஜரையும் ஜனாதிபதியிடம் நேரடியாக கையளித்துள்ளார்,

2. முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் காணி விடுவிப்பு மற்றும் குருக்கள்மடம் காணி விடுவிப்பு, பட்டிப்பளை அசிரியர் பயிற்சி நிலைய காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதியிடம் கோரிக்கை,

3. கடந்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்டு காணப்படும் தொழிற்சாலைகள் மீள திறக்கப்பட வேண்டும். வாழைச்சேனை காகித ஆலை, ஓட்டு தொழிற்சாலைகள், அரச அச்சகம், அரசி ஆலைகள் மீள இயங்கச்செய்யப்பட வேண்டும்,

4. படுவான்கரை மக்களுக்கான குடிநீர் பிரச்சினைக்கான தீர்வினை காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,

6. கித்துள் – உறுகாம திட்டம், தம்பிட்டிய வயல்கள் நீரினுள் செல்வதை தடுப்பதற்காக நீரின் கொள்ளளவு குறைக்கப்பட்டு இதனால் நீர்ப்பாசன வயல்களின் பரப்பு குறைக்கப்பட்டுள்ளது,

6. மேய்ச்சல்தரை – மகாவலி வலதுகரை மற்றும் கித்துள் உறுகாம திட்டங்கள் நடைமுறைபடுத்தமுன் தீர்மானம் எடுத்துக்கொள்ள வேண்டும்,

7. யானைத்தாக்கம் உள்ள கிராமங்களுக்கு யானை வேலி அமைக்கப்பட வேண்டும்,

போன்ற பல முன்மொழிவுகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு, இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கொண்டுசென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எவ்வித பேதங்களும் இல்லை என்பதுடன், வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கும் அபிவிருத்தியின் அனுகூலங்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பினை நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களைப் போன்றே மக்களின் வாழ்வாதார மார்க்கங்களை அபிவிருத்தி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை முறையாகவும் துரிதமாகவும் செயற்படுத்துவதற்கு இதன்போது ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மக்களின் குடிநீர், சுகாதார, கல்வி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் மடு புண்ணிய பூமியில் குடிநீர் வசதியை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் அதன் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் அபிவிருத்தி, வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையின் அபிவிருத்தி, ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களின் அபிவிருத்தி, அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் அபிவிருத்தி மற்றும் வடக்கில் சிறு கைத்தொழில்களை வலுவூட்டவும் மறுசீரமைக்கவும் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் மீளாய்வு செய்யப்பட்டது.

மேலும் வட மாகாணத்தில் வன்முறை, போதைப்பொருள் பயன்பாடு ஆகியன அதிகரித்துச் செல்லல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை வினைத்திறனாக செயற்படுத்துமாறு ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வீடமைப்பு, நீர் வழங்கல், சுகாதாரம் ஏற்பாடு மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க முப்படையினர் இணக்கம் தெரிவித்திருப்பதுடன், அந்த விடயம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்