வெடுங்குநாறி ஆதி சிவன் ஆலயமும் தொல்பொருட் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பும்

தமிழர்கள் தனித்துவமான கலை, கலாசார, பண்பாடு பாரம்பரியங்களுடன் இந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு எமது தேசத்தில் காணப்படும் பல்வேறு சான்றுகள் இன்றும் பறைசாற்றி நிற்கின்றன. யுத்தம் மற்றும் அதன் தாக்கத்தில் இருந்தும் மீண்டும் தமது வாழ்வியலை மீட்டெடுக்க முனையும் தமிழ் சமூகம் தனது கலாசார பாரம்பரியங்களில் இருந்து என்றும் விலகாது அதனை போற்றிப் பாதுகாத்து வருகின்ற நிலையில், தென்னிலங்கை பேரினவாத சக்திகள் தமது அதிகார செயன்முறைகளின் ஊடாக தமிழர்களது கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையினை சிதைக்க முனைவதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.

அந்தவகையில் வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுங்குநாறி மலைப் பகுதியில் உள்ள ஆதி சிவனை ஏறத்தாழ 200 வருடங்களுக்கும் மேலாக இப் பிரதேச மக்கள் வழிபட்டு வந்தனர். யுத்தகாலத்தில் வழிபாடுகள் நலிவடைந்திருந்தாலும் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் மீண்டும் வழிபாடுகள் சிறப்பாக இடம் பெற்றும் வந்தன. தற்போது வெடுங்குநாறி மலையில் உள்ள ஆதி சிவன் ஆலயத்திற்கு சென்று சுதந்திரமாக வழிபடுவதற்கும், கட்டிட நிர்மாணங்களை மேற்கொள்வதற்கும் தொல்பொருட் திணைக்களம் தடை வித்துள்ளது.

வவுனியா வடக்கு, ஒலுமடு பிரதேசத்தில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வெடுங்குநாறிமலை என்பது நாகர் காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய ஒரு இடமாகவும், அதில் தமிழ் பிராமிய எழுத்துக்கள் காணப்படுவதனையும், மலையின் அடிவாரத்தில் பிள்ளையார் மற்றும் முருகன் விக்கிரகங்களும், மேலே செல்லச்செல்ல வைரவர், நாகதம்பிரான் சிலைகள் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளதையும், மலையின் உச்சியில் இந்துக்களின் முழுமுதல் கடவுளான ஆதி சிவனின் இலிங்கவடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது. அத்துடன் இந்து ஆலயங்களுக்கு அருகில் கேணி அல்லது குளம் அமைந்திருப்பது வழமை. இதனை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் பாறை படைகளை குடைந்து அழகிய சிறிய கேணியும் அமைக்கப்பட்டு நாகர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாகர்கள் இங்கு சிவவழிபாட்டில் ஈடுபட்டார்கள் என்பதை தமிழர் தொன்மை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஆய்வாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

யுத்த காலத்திலும், அதன் பின்னரான காலத்திலும் அப்பகுதி மக்களால் இவ் ஆலயப்பகுதி தெய்வீக பிரதேசமாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.இந் நிலையில் குறித்த பகுதியில் தொல்பொருட்கள் இருப்பதாகக் கூறியே தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இது உண்மைக்குப் புறம்பானது என அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் அரசாங்கம் தனது ஆதிக்கத்தை மறைமுகமாகச் செலுத்தி இங்கு புத்தர் கோயில் அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்கின்றனர் பிரதேச மக்கள்.

வவுனியா வடக்கின் எல்லைப் பகுதியில் இனப்பரம்பலை குலைக்கும் வகையில் சிங்கள குடியேற்றங்கள் வேகமாக நடைபெற்று வருகின்றது. நெடுங்கேணியின் கிழக்குப் பகுதியை மகாவலித் திட்டத்தின் எல் வலயம் என அடையாளப்படுத்தி சிங்கள குடியேற்றங்கள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. இந்தப் பின்னணியில் தொல்பொருள் திணைக்களத்தையும், வனவளத்திணைக்களத்தையும் பயன்படுத்தி புதிய குடியேற்றங்களுக்கு அண்மையில் உள்ள வடக்கின் உயரமான மலைகளில் ஒன்றாகிய வெடுங்குநாறி மலையில் புத்தர் சிலை அமைப்பதை நோக்கமாக கொண்டே காய் நகர்த்தல் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். இதனை வலுப்படுத்தும் வகையில் இப்பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந் நிலையில் ஆடி அமாவாசை உட்பட ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இப் பிரதேசத்தில் உள்ளவர்களால் இங்குள்ள ஆதி விக்கிரகங்களுக்கு பூஜை வழிபாடுகள் செய்து வருவதுடன் சுமார் 300 அடி உயரத்தில் உள்ள மலைக்குன்றில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் ஆதி சிவனுக்கும் உமைஅம்மைக்கும் பயபக்தியுடனும் மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் சென்று வழிபாடுகளை 5 தலைமுறைகள் கடந்தும் பல்லாண்டு காலமாக செய்துவருகின்றனர்.

தமிழர்களது மரபுசார்ந்த பல இடங்களையும் தொல்லியல் திணைக்களம் தமது ஆளுகைக்குள் உட்படுத்தி அதனை பாதுகாப்பதாக தெரிவித்து பௌத்த மேலாதிக்க சிந்தனை கொண்டு பௌத்த வழிபாட்டு இடங்களாக மாற்றியுள்ளதனை கிழக்கில் கன்னியா வென்னீரூறிலும், தமிழர் வழிபாட்டு இடமான கதிர்காமத்திலும், வடக்கில் கந்தரோடையிலும் நாம் கண்டுள்ளோம்.

அவ்வாறே பரம்பரை பரம்பரையாக இந்துக்களால் வழிபடப்பட்டு வருகின்ற வடக்கில் உள்ள வெடுங்குநாறி மலைக்கும் இந்நிலை ஏற்படக்கூடாது என்பதில் வடபுலத்து தமிழர்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் விளைவாகவே மக்கள் வெடுங்குநாறி மலைக்காக வீதியில் இறங்கி போராடியுள்ளார்கள். தமிழர் தொன்மையை அழிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து எமது பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது அதாவது வெடுங்குநாறி ஆதி சிவன் ஆலய தமிழர் தொன்மையை அழிக்க நினைக்கும் சக்திகளை தகர்த்தெறிய வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. தமிழர் அடையாளமான வெடுங்குநாறி மலை மற்றும் ஆதி சிவன் ஆலயத்தை மீட்டு பாதுகாப்பதன் மூலமே எதிர்காலத்தில் தமிழரின் வரலாற்று மரபுகளுடனும், கலாசார பண்பாடுகளுடனும் தொடர்புடைய இடங்களை பாதுகாத்து தமிழர் இருப்பை நிலைபெற செய்ய முடியும் என்பதையே கடந்த கால படிப்பினைகளும் தொல்பொருட் திணைக்களத்தின் நடவடிக்கைகளும் வெளிப்படுத்தியிருக்கின்றது.

எனவே தமிழ் மக்கள் தமது வரலாறு, காலாசார பண்பாடுகளுக்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய அவசியத்தை மீண்டும் காலம் ஏற்படுத்தியிருக்கின்றது. இதனை அனைவரும் புரிந்து செயற்பட வேண்டியது அவசியமானதே.

எஸ்.திவியா

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்