கனடாவுக்கு வருகை தந்திருக்கும் யாழ்ப்பாண நகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அவர்களுக்கு பொது வரவேற்பு!

கனடாவுக்கு வருகை தந்திருக்கும் யாழ்ப்பாண நகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அவர்களுக்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில் பொது வரவேற்பளித்து மேன்மைப்படுத்த இருக்கிறது.

கனடிய தமிழர் பேரவை கடந்த மாதம் நடத்திய தமிழர் தெரு திருவிழா (2018) வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருகை தந்த நகர முதல்வர் மதிப்புக்குரிய இமானுவேல் ஆனோல்ட் கடந்த பல நாட்களாக ரொறன்ரோ நகர முதல்வர் யோன் ரோறி உட்பட பல அரசியல் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். மொன்றியல் வாழ் தமிழர்கள் விடுத்த அழைப்பை அடுத்து அவர் மொன்றியலுக்கும் சென்று வந்திருக்கிறார்.

இவர் புதிய தலைமுறை அரசியல் தலைவர்களில் ஒருவராவார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பட்டதாரியான அவர் அந்தப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

2013 இல் நடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட அவர் 26,888 விருப்பு வாக்குகள் பெற்று நாலாம் இடத்துக்கு வந்திருந்தார். 2018 இல் நடந்த யாழ்ப்பாண மாநகர சபைக்கான தேர்தலில் 19 ஆம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இவர் போர்க் காலத்தில் அழிவுண்ட யாழ்ப்பாண மாநகர சபைக் கட்டடத்தை அதே இடத்தில் அழகும் கம்பீரமும் தமிழர்களின் தொன்மைகளைச் சித்தரிக்கும் திராவிட கட்டடக் கலையம்சங்கள் கொண்ட பெரு நகரங்களுக்கு ஒப்பான நகரமாக உலக வங்கியின் மூலோபாய நகர மேம்பாட்டுத் திட்டத்தின் உதவியோடு மீளக் கட்டியெழுப்ப இரவு பகலாக உழைத்து வருகிறார்.

ஊழலற்ற அதே நேரம் வினைத்திறனோடு கூடிய ஆட்சியின் மூலம் போரினால் களை இழந்து போன யாழ்ப்பாணத்தை மீளக் கட்டியெழுப்ப அவர் உறுதி பூண்டுள்ளார்.

அவரது பணிகளுக்கு ஊக்கமளிக்கவும் புதிய இளம் தலைமுறையைப் பிரதிநித்துவப்படுத்தும் ஓர் அரசியல் தலைவரிடமிருந்து தாயக அரசியல், அபிவிருத்தி மற்றும் சமூக விடயங்கள் பற்றி நேரடியாகக் கேட்டறிந்து கொள்ளவும் அவருக்கு கனடா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில் ஒரு பொது வரவேற்பு அளிக்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

காலம் – செப்தெம்பர் 08 (சனிக்கிழமை), 2018
இடம் – பெரிய சிவன் கோயில், 1148 Bellamy Rd N, Scarborough, ON
நேரம் – மாலை 5.00 மணி – மாலை 9.00 மணி

இந்தப் பொது வரவேற்பில் கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கிறது..

தொடர்பு – 647 763 9410, 647 829 4044, 647 708 6813, 416 281 1165, 416 282 0947

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்