ராஜீவ் கொலை: எழுவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

குறித்த 7 பேரையும் முன்விடுதலை செய்வதற்கு ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து தீர்மானிப்பதற்காக தமிழக அமைச்சரவை இன்று (09) மாலை கூடியது.

இதன்போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசியல் சாசனத்தின் 161 ஆம் பிரிவின் படி, ஆளுநருக்குரிய அதிகாரங்களின் அடிப்படையில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 20 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதுடன், அதில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

7 பேரும், கடந்த 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களை விடுவிப்பதற்காக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதுடன், உயர்நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன.

இந்நிலையில், குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுத்து, ஆளுநருக்கு தெரிவிக்கலாம் எனவும் ஆளுநர் பரிசீலித்து இறுதி முடிவை அறிவிப்பார் எனவும் உயர்நீதிமன்றம் கடந்த 6 ஆம் திகதி அறிவித்தது.

இதனையடுத்து, சட்டநிபுணர்கள், சிரேஷ்ட அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் கே. பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.

இது குறித்து தீர்மானம் எடுப்பதற்கு, தமிழக அமைச்சரவை சென்னை தலைமை செயலகத்தில் இன்று கூடியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய தம்மை விரைவில் விடுவிக்கக் கோரி முருகன், நளினி ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

இதனிடையே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்த இந்திய உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நகல் நேற்று உத்தியோகபூர்வமாக வௌியிடப்பட்டது.

இதனூடாக வழக்கை முடித்துவைத்துள்ளதாக இந்திய உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் சுதந்திரமான முறையில் அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு முடிவெடுக்கலாம் என இந்திய உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்