இரட்டைக் கோபுர தாக்குதல் நினைவுதினம் இன்று

கடந்த 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி நடத்தப்பட்ட இரட்டைக் கோபுர தாக்குதலின் 17ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். இதனை முன்னிட்டு, அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் டி.சி., நியூயோக், பென்சில்வேனியா மற்றும் ஷான்க்வில்லே ஆகிய நகரங்களில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த தாக்குதலில் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இற்றைக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட விமானங்கள் உலக வர்த்தக மையம், பெண்டகன் மற்றும் பென்சில்வேனியா பகுதியில் மோதி வெடிக்கச் செய்யப்பட்டமையால் சுமார் 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.

நியுயோர்க் நகரில் இடம்பெறும் நினைவுகூரல் நிகழ்வின்போது, இரட்டைக் கோபுர தாக்குதலைத் தவிர 1993ஆம் ஆண்டு உலக வர்த்தக மையம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலின் போது உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்படுகின்றது. 1993 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் இங்கு வாசிக்கப்பட்டு பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.

முதலாவது விமானம் வடக்கு கோபுரத்தில் மோதிய காலை 8.46 மணியளவில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேவேளை, இரண்டாவது விமானம் தெற்கு கோபுரத்தில் மோதிய 9.03 மணிக்கு மீணடும் நகர மக்களால் மௌன அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம்.

ஒசாமா பின்லேடன் மற்றும் அல் கொய்தா தீவிரவாத அமைப்பு இந்த தற்கொலைத் தாக்குதலுக்கு பொறுப்புக்கூறியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களுக்கு அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது.

இதேவேளை, 2011 ஆம் ஆண்டளவில் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் மறைந்திருந்த நிலையில் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்