தலவாக்கலை போராட்டத்திற்கு பல அமைப்புகள் ஆதரவு – அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு

(ஹற்றன் விசேட நிருபர்)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் எதிர்வரும் செப்ரெம்பர் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக தொழிலாளர் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, விவசாயத் தோட்ட தொழிலாளர் காங்கிரஸ், அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய அமைப்புக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்த பேச்சுவார்த்தை ஒன்று கொழும்பில் நேற்று (11) இடம்பெற்றது. இதில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.சதாசிவம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மலையக தொழிலாளர் முன்னணியின் சார்பில் கே.சுப்ரமணியம், விஸ்வநாதன், பிரசாத், அஜித்குமார், அஸிஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அஸ்ரப் அஸிஸ், விவசாய தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆர்.எம்.கிருஸ்ணசாமி ஆகியோரும் தொழிலாளர் தேசிய சங்கம் சார்பில் தொழிற்சங்க ஆலோசகர் வீ.புத்திரசிகாமணி மற்றும் பிரதித் தலைவர் மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதுன் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் 23ம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தில் கட்சி, தொழிற்சங்க பேதம் பாராமல் கலந்து கொள்ளுமாறு பொது அமைப்புக்கள், புத்திஜீவிகள், இளைஞர்களிடம் பொதுவான பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்