வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி சோதனை: 20 பேருக்கு எதிராக நடவடிக்கை

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் போக்குவரத்து பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 20க்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று மதியம் 2 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை இந்த திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணிவதில்லை, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது , அதிவேகமாக செல்வது தொடர்பாக பொதுமக்களால் பல முறைப்பாடுகள் பொலிஸாருக்கு முன்வைக்கப்பட்டது.

இதனை கருத்தில் கொண்ட வவுனியா மாவட்ட போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான 8 க்கு மேற்பட்ட போக்குவரத்து பொலிஸார் வைரவப்புளியங்குளம் வீதியில் மதியம் 2.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணிவரையிலான 4 மணிநேரம் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமை, ஆவணங்கள் இல்லாமை, தலைக்கவசம் அணியாமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் 20க்கு மேற்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கைக்கு சமூக அமைப்புக்கள், அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்ததுடன் இவ்வாறான நடவடிக்கையினை தொடர்ந்து மேற்கொள்ளுமாறும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்