கிழக்கில் ஆசிரியர் நலன்கருதி கைவிரல் பதிவு இயந்திரத்தை அகற்றக் கோரிக்கை

கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகஷ்ட, கஷ்ட பிரதேச பாடசாலைகளில் கல்வி புகட்டும் ஆசிரியர்கள் காலை வேளையில் உரிய வேளைக்கு பாடசாலைக்குச் செல்வதில் பல்வேறுபட்ட இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர்.

இப்பாடசாலைகளில் கைவிரல் பதிவு அடையாள இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளமையால் இவ் ஆசிரியர்கள் அவசர அவசரமாக வாகனங்களில் பயணிக்கும் போது வீதி விபத்துக்களுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர். இன்னும் சிலர் படுகாயமடைந்து அங்கவீனம் அடைகின்றனர். இதற்கும் அப்பால் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி உயிரிழக்கின்ற சம்பவங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. எனவே கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகஷ்ட, கஷ்ட பிரதேச பாடசாலைகளில் கைவிரல் அடையாள இயந்திரங்களை இல்லாமல் செய்ய வேண்டும்.

இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகல்லாகமவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கேட்டுள்ளார். அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலை என்பவற்றில் பணியாற்றுவோர் கட்டாயம் நேர முகாமைத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் ஒரு சில இடங்களில் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் பல பாதகமான விளைவுகள் ஏற்படுவதையும் காணலாம்.

குறிப்பாக அதிகஷ்ட, கஷ்ட பிரதேசப் பாடசாலைகளில் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் காலை 7.30 மணிக்கு முன்னர் பாடசாலைக்கு சென்று தமது வரவை பதிவு செய்ய வேண்டும். ஆனால் போக்குவரத்து வசதியற்ற மற்றும் தொடர்ந்தும் காட்டு யானைகளின் நடமாற்றம் உள்ள இடங்களுக்குச் செல்லும் போது ஒரு சில நிமிடங்கள் தாமதமாகலாம். இருப்பினும் இவ் ஆசிரியர்கள் தமது கடமையை அர்ப்பணிப்புடன் மேற்கொள்வதை காணமுடிகின்றது. இதே வேளை கரடுமுரடான பாதைகளில் பயணிக்கும் போது பல வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் விலை மதிக்க முடியாத உயிர்கள் அவமாய் பறிபோகின்றன.

சில தினங்களுக்கு முன்னர் பெரியநீலாவணையைச் சேர்ந்த ஆசிரியத் தம்பதியினர் உரிய வேளைக்கு பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது வீதி விபத்தினை சந்தித்தனர். இதனால் ஒருவர் ஸ்தலத்திலே உயிர் நீத்தார். மற்றவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பல சம்பவங்களை எடுத்துக் கூற முடியும். எனவே மேற்குறிப்பிட்ட பாடசாலைகளில் கைவிரல் பதிவு அடையாள இயந்திரத்தினை அகற்றி விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்று அந்தக் கடிதத்தில் கேட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்