மாணவியிடம் கடிதத்தைக் கையளிக்கத் தவறிய, தபால் ஊழியருக்கு விளக்கமறியல்

நுவரெலியா – வலப்பனை மகாஊவ கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவியிடம் உரிய நேரத்தில் கடிதத்தைக் கையளிக்கத் தவறிய தபால் ஊழியர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வலப்பனை – மகாஊவ எனும் கிராமத்தில் தோட்டத்தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த மைக்கல் நிலுக்ஷியா மேரி, கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிகத்துறையில் தோற்றி, 2A, 1B பெறுபேற்றைப் பெற்று, மாவட்டத்தில் 34 ஆவது இடத்தைப்பிடித்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானார்.

களனி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளமை தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் உரிய நேரத்தில் கிடைக்காமையினால், இந்த மாணவி இணையத்தளம் ஊடாக பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பினை இழந்தார்.

இந்த விடயம் தொடர்பில் வலப்பனை பொலிஸ் நிலையத்திலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மாணவிக்கு உரிய நேரத்தில் கடிதத்தை கையளிக்கத் தவறிய வலப்பனை – மகாஊவ பகுதி தபால் ஊழியருக்கு வலப்பனை நீதிமன்றத்தினால் நேற்று (12) பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த பிடியாணைக்கு அமைய கைது செய்யப்பட்ட தபால் ஊழியர் இன்று வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், கடிதம் தபால் நிலையத்திற்கு கிடைத்தவேளை கடமையிலிருந்த தபால் நிலைய அதிபரையும் வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பித்துள்ளது.

இந்த மாணவிக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்கதெரிவிக்கையில்

களனி பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடத்திற்கு சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய புதிய மாணவர்களின் பெயர்ப் பட்டியலை இதுவரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுப்பி வைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாயின், களனி பல்கலைக்கழகத்தில் அவரை சேர்த்துக்கொள்வதில் தடைகள் ஏதும் இல்லை என அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்