இன்று தீர்மானமிக்க போட்டியில் களமிறங்கும் இலங்கை

ஆசிய கிண்ணத் தொடரின் பி பிரிவின் இரண்டாவது போட்டி இன்று இலங்கை அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.

அபுதாபியில் இடம்பெறும் இன்றைய போட்டி இலங்கை அணி, தொடரில் தன்னை தக்கவைத்துக்கொள்வதற்கான முக்கிய போட்டியாக அமைந்துள்ளது.

ஏற்கனவே, நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில், பங்களாதேஷ் அணி, இலங்கை அணியை 137 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டது.

இந்த நிலையில், இன்று ஆப்கானிஸ்தானுடன் இடம்பெறும் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் மாத்திரமே இலங்கை அணி சுப்பர் 4 சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை பெறும்.

இன்றைய போட்டியில், ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்து பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில், நிகர ஓட்ட சராசரியின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கான இரண்டு அணிகளும் தெரிவுசெய்யப்படும்.

இதேவேளை,ஆசிய கிண்ணத் தொடரில் நேற்று இடம்பெற்ற 2வது போட்டியில், ஹொங்கொங் அணியை எதிர்க் கொண்ட பாகிஸ்தான் அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய ஹொங்கொங் அணி 37.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் உஸ்மான் கான் 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 23.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக, இமாம்-உல்-ஹக் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்