அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு -மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார் கோரிக்கை

(மன்னார் நிருபர்)

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்ந்தும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்தார்.

மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று வியாழக்கிழமை(20) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

மன்னார் பிரஜைகள் குழுவின் செயல் திட்ட நிகழ்வு காரணமாக நேற்று புதன் கிழமை(19) அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்தோம்.

தமது விடுதலையை முன் வைத்து அவர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நாங்கள் சென்ற பொது அவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து எங்களை வந்து சந்தித்தார்கள்.

அவர்களுடைய உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றதை நாங்கள் அவதானித்தோம்.சக்தியை இழந்து மிகவும் வேதனைக்கு உள்ளானவர்களாக காணப்பட்டனர்.

தமது விடுதலைக்கு முன் நின்று உழைக்குமாறும் எங்களிடத்தில் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தாங்கள் சுமார் 9 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், தற்போது பல்வேறு அரசியல் பிரமுகர்கள் தங்களை வந்து சந்தித்துள்ளதாக தெரிவித்தனர்.

தாங்கள் எவ்வித விசாரணைகளும் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இது வரை காலமும் தமக்கு எவ்வித விமோசனமும் கிடைக்கவில்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுகவீனம் அடைந்துள்ள போதும் அவர்களுக்கு கை விலங்கிடப்பட்டே வைத்திய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.அதனை அவர்கள் துயரத்துடன் எங்களிடத்தில் தெரிவித்துள்ளனர்.

தங்களை விடுதலை செய்யாது விட்டாலும்,தங்களை புனர்வாழ்வுக்காவது அனுப்பும் படி கோரிக்கை விடுத்துள்ளனர். 12 அரசியல் கைதிகள் அங்கே இருக்கின்றார்கள்.அவர்களில் 3 பேர் மிகவும் சுகவீனமடைந்து உள்ளனர்.

அவர்களுக்கான நடவடிக்கைகள் எவையும் நீதிமன்றத்தின் ஊடாகவும் எடுக்கப்படவில்லை.சுமார் 102 நாட்களுக்கு அவர்களின் விசாரணைகளை தள்ளி வைத்துள்ளார்கள்.

அவர்களின் விடுதலைக்காக போராடுவதற்காகவே அல்லது கேட்பதற்காகவே யாரும் இல்லை என்ற ஆதங்கம் அவர்களிடத்தில் இருக்கின்றது.
அவர்களின் விடுதலைக்காக அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என அனைவரிடமும் மன்னார் பிரஜைகள் குழுவின் சார்பாக வினயமாக கேட்டுக்கொள்ளுகின்றோம்.

குறிப்பாக அரசியல் பிரமுகர்களை அணுகி அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இந்த நாட்டின் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

இவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி புனர்வாழ்வு வழங்க வேண்டும் என அரசினையும் அதனை சார்ந்துள்ளோரிடமும் நாங்கள் காத்திரமாக கேட்டு நிற்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்