தமிழர்களின் இருப்பை உருக்குலைக்க சதி!- சிவமோகன்

ஈழத்தமிழர்களின் இருப்பை உருக்குலைப்பதற்காக, பல சக்திகள் பல்வேறு விடயங்களில் ஊடுருவல் செய்து தமிழர்களை இன்று அழித்துக் கொண்டிருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“தமிழர்களின் இருப்பை உருக்குலைக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலாகவே, வடமாகாண சபையின் அமைச்சரவை மாற்றமும், அதன் பிரச்சினைகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விரும்பியோ, விரும்பாமலோ சில விடயங்களில் தாம் அனுசரித்து போக வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. நிச்சயமாக அதற்கான தீர்வுகள் கிடைக்கும்

மேலும் தமிழ் மக்கள் விடயத்தில் கூட்டமைப்பு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் அரசாங்கம் தான் சரியான தீர்வை முன்வைக்காமல் இழுத்தடிப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.

இதேவேளை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை அரசு சுமத்தியுள்ளமை நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவுகள் தமிழ் அரசியல் கைதிகளை துன்புறுத்தி பொய்யான வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டார்கள் என்பதை எம்மால் வெளிப்படையாக கூறமுடியும்.

மேலும் பொலிஸாரின் வாக்குமூலங்களையே இறுதி முடிவாக கருதி சில நீதிமன்றங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளன.

ஆகையால் தான் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக எமது மக்களை நல்வழிப்படுத்தக் கூடிய புதியதொரு சட்டத்தை நடைமுறையில் கொண்டுவர வேண்டும்” என வலியுறுத்துவதாக சிவமோகன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்