தாயின் உடலத்தில் அமர்ந்து மரணப் பூஜை; தமிழ்நாட்டைப் பதற வைத்த அகோரி.!

திருவெறும்பூர் அருகே அகோரி ஒருவர் இறந்த தனது தாய்க்கு விசித்திரமான முறையில் இறுதிச் சடங்கு செய்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரி பயிற்சி பெற்ற மணிகண்டன் என்பவர் நிர்வகித்து வருகிறார். அகோரி மணிகண்டனின் தாயார் மேரி திடீரென மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் அடக்கம் அரியமங்கலம் மத நல்லிணக்க இடுகாட்டில் நடைபெற்றது. முன்னதாக மேரியின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்றனர். இதில் அகோரிகள் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

இடுகாட்டிற்கு சென்றதும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது அகோரி மணிகண்டன் தனது தாயின் உடல் மீது அமர்ந்து, மந்திரங்கள் ஓத பூஜைகள் செய்தார். அவருடன் சக அகோரிகளும் டம்ரா மேளம் முழங்க, சங்கு ஊதி அகோரி பூஜை நடத்தினர்.

இவ்வாறு இறந்தவரின் உடல் மீது அமர்ந்து அஞ்சலி பூஜை நடத்தினால் அவரது ஆன்மா இறைவனை சென்றடையும் என்று விளக்கம் கூறப்பட்டது. இது அகோரிகளின் வழக்கமாகவும் இருந்து வருவதாக தெரிகிறது. இதையடுத்து மேரியின் உடலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, அடக்கம் செய்தனர்.

மரணமடைந்த பெண்ணின் உடல் மீது அமர்ந்து அகோரி நடத்திய விசித்திர பூஜையால் அதிர்ந்து கிடக்கிறது திருச்சி வட்டாரம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்