தமிழர்கள் சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை – பச்சிலைப்பள்ளி தவிசாளர்.

தமிழ் மக்கள் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல எனவும் அவர்கள் சிங்கள இனவாத அரசுகளுக்கு எதிராக போராடினார்களே தவிர ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை என பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஒழுங்கமைப்பில் நல்லிணக்கத்துக்கான உறவுப்பயணம் என்னும் கருத்திட்டத்தை அடிப்படையாக கொண்ட இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி திட்டம் 2018 எனும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களுடைய வாழ்வியல் உரிமைகள் மறுக்கப்பட்டு கலை கலாசார பண்பாட்டு உரிமைகளுடன் கூடிய அனைத்து விடயங்களிலும் பின்தள்ளப்பட்டு இரண்டாம் தார பிரசைகளாக நடத்த முற்ப்பட்ட வேளையிலேயே தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடினார்கள்.

இதை இனவாத நோக்கோடும்,குறுகிய அரசியல் இலாபம் தேடும் சிங்கள பேரினவாத சக்திகள் திரிபு படுத்தி இனங்களை பிரித்தாண்டனர். இதனால் தமிழர்களாகிய நாம் பல்வேறு இழப்புக்களை சந்தித்துள்ளோம்.

இங்கு சிங்கள சகோதரர்கள் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும் எமது அரசியல் உரிமைகள் எமக்கு வழங்கப்படுமானால் தமிழ் மக்களாகிய நாம் ஒற்றுமைப்பட்டு இந்த நாட்டை எதிர்காலத்தில் உலகில் சிறந்த நாடக உருவாக்க முடியும் என்றார்.

பளை வண்ணாங்கேணி கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய இளைஞர் சேவை  மன்றத்தின் கிளிநொச்சி மாவட்ட உதவிப்பணிப்பாளர்,மாத்தறை மாவட்ட இளைஞர் சேவை மற்றும் கிராம அலுவலர்,பளை போலீஸ் பொறுப்பதிகாரி,சமூர்த்தி உத்தியோகத்தர்,மாத்தறை மாவட்ட இளைஞர்கள்,கிளிநொச்சி மாவட்ட இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்