“உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால் தீர்வு கிட்டுமா?” – நாமலிடம் சிறிதரன் நேரில் கேள்வி

“உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால், இணைந்த வடக்கு, கிழக்கில் அரசியல் தீர்வை வழங்கத் தயாரா? தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியுமா?”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வனான நாமல் ராஜபக்ஷ எம்.பியிடம் நேரில் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சி.சிறிதரன்.

நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. தினப்பணிகள் முடிவடைந்த பின்னர் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் ஆரம்பமானது.

இதில் உரையாற்றிய சிறிதரன் எம்.பி., உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திப் பேசினார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய நாமல் ராஜபக்ஷ எம்.பி.,

“தமிழ் மக்களுக்கு 2015 இல் வழங்கிய வாக்குறுதியை இந்த அரசு மீறிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதை நிறைவேற்றப் பாடுபடவில்லை. எமது ஆட்சியில் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்தோம்” என்றார்.

இதற்குப் பதிலளித்த சிறிதரன் எம்.பி.,

“நாங்கள் எதிர்க்கட்சி எம்.பிக்கள். இக்கேள்வியை நீங்கள் அரசிடம்தான் கேட்கவேண்டும். ஆட்சிக்கு வரும்வரைதான் எல்லாம். நீங்கள் சிறைக்கு சென்ற பிறகுதான், அரசியல் கைதிகளின் வேதனை புரிந்துள்ளது. நீங்கள் உண்மையாகவே அக்கறையுள்ள நபர் எனில், உங்கள் தந்தை (மஹிந்த ராஜபக்ஷ) ஆட்சிக்கு வந்த பிறகு இணைந்த வடக்கு – கிழக்கில் தீர்வை வழங்குவார் என்று உறுதியளிக்க முடியுமா? காணாமல்போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வுகளைக் காணமுடியுமா?” என்று கேட்டார்.

இதற்கு நாமல் பதிலளிக்க எழுந்தபோதும், சபைக்குத் தலைமை தாங்கிய உறுப்பினர் அதற்கான வாய்ப்பை மறுத்துவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்