சரித்திரத்திலேயே பாரிய சூறாவளி: அமெரிக்காவை புரட்டி போட்ட அனர்த்தம்

சரித்திரத்திலேயே பாரிய சூறாவளி என கருதப்படும் மைக்கல் என நாமகரணம் இடப்பட்டுள்ள சூறாவளி அமெரிக்காவின் வடமேற்கு ப்ளோரிடாவை தாக்கியுள்ளது.

ப்ளோரிடாவின் கரையோர நகரங்களை தாக்கியுள்ள இந்த சூறாவளி பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இரவு நேரத்தில் இந்த சூறாவளியின் தாக்கத்தை அடுத்து, மீட்புப் பணியாளர்கள் தமது பணிகளை தொடரமுடியாத நிலையில் உள்ளனர்.

சூறாவளிக்கு முதல் நாள் பிற்பகல், குறித்த பிராந்தியத்தில் மணிக்கு 250 கிலோமீற்றர் வேகத்தில் சூறாவளி வீசியதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தினால் குழந்தை ஒன்று உட்பட இருவர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி மரணித்துள்ளனர்.

உறுதிப்படுத்தப்பட்ட சேத விபரங்கள் வெளியிடப்படாத நிலையில், இந்த சூறாவளி கரோலினஸ் பிரதேசத்தை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளோரிடாவில் உள்ள பனாமா சிட்டி கடற்கரை மற்றும் கீற்றன் கடற்கரை உட்பட பல வடக்கு பிரதேச நகரங்கள் இந்த சூறாவளியினால் பாதிப்படையும் என அமெரிக்க தேசிய சூறாவளி மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சூறாவளி தாக்கிய இடங்களில் இருந்த மக்கள் முற்றாக வெளியேறாத நிலையில், அந்த பிரதேசங்களில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, தற்போது பாரிய இயற்கை அனர்த்தத்தை எதிர்நோக்கும் ப்ளோரிடாவில் 1935 ஆம் ஆண்டும் இதேபோன்ற பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்