தமிழ் மக்கள் சார்பில் எமது தீர்மானங்கள் அமையும்-மாவை சேனாதிராஜா

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமராக மஹிந்தராஜபக்ஷவை நியமித்தார். ஆனால் அது அரசியலமைப்பின் பிரகாரம் பிழையானது என்று தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்காத சந்தர்ப்பத்தில் இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை சரியா என்ற கேள்வி எழுகின்றது.ஆனால் நாம் நல்லாட்சி அரசாங்கத்தினால் ஜனாதிபதியினால் ஏமாற்றப்பட்டுள்ளோம்.நாடாளுமன்றத்தில் என்ன தீர்மானம் எடுப்பது என்பது தொடர்பில் இதுவரை நாம் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. எம்மைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் சார்பில் எமது தீர்மானங்கள் அமையும் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் குறித்து கருத்துத்தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் யார் பெரும்பான்மையை நிரூபிக்கின்றார்களோ அவர்களுக்கு அடுத்து எந்தக் கட்சியில் உறுப்பினர் அதிகமாக இருக்கிறார்களோ அந்தக் கட்சி எதிர்க்கட்சியாக மாறுவதோடு அந்தக்கட்சியின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக வருவார். அது எமக்கு ஒரு தீர்க்கமான விடயமல்ல. தற்போதைய இக்கட்டான அரசியல் சூழலில் நாம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சிந்திக்கவில்லை.

நாங்களும் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றோம். இது தொடர்பில் சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கடிதமும் அனுப்பியிருக்கின்றார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை உலக நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இந்த நிலையில் ஒரு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் தான் மஹிந்தவுடன் எமது தலைவர் சம்பந்தன் சந்திப்பு நடத்தினார். அதன் போது தமிழ் மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து பேசப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கான இனப்பிரச்சினைத் தீர்வு, காணிவிடுவிப்பு, கைதிகள் விடுதலை போன்ற விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ எமது ஆதரவைக் கோரினார். ஆனால் நாம் எமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றோம். கூட்டமைப்பு மக்களின் நலன் சார்ந்தே முடிவெடுக்கும். எனவே இவற்றின் அடிப்படையிலேயே நாம் அடுத்து என்ன செய்யப்போகின்றோம் என்றும் கலந்தாலோசிப்போம்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இதுவரை நாம் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. எம்மைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் சார்பில் எமது தீர்மானங்கள் அமையும். நல்லாட்சி அரசில் தீர்வு கிடைக்கும் என நம்பப்பட்டது. ஆனால் தற்போது ஏமாற்றமடைந்திருப்பதாகவே உணர்கின்றோம் எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்