உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் சிறை!

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி 2 மணி நேரத்துக்கு மேல் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுமென சென்னை பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் பட்டாசுகளை வெடித்தால் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டனை வழங்கப்படுமென பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றையும் நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் இந்திய தண்டனை சட்டம் 188ஆவது பிரிவின் கீழ் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து வழங்கப்படுமென அவ்வறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மகள் தீபா உட்பட பல பிரபலங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்