கூட்டமைப்பின் முடிவு அறம் சார்ந்தது! – அதன் கனடா கிளை பாராட்டு

அறத்துக்கும் மறத்துக்கும் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நீதிக்கும் அநீதிக்கும் இடையில் நடைபெறும் போரில் நடுநிலைமைக்கு இடமில்லை!  எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு எடுத்த தீர்மானத்தைகனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு மனதுடன் வரவேற்கிறது.

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா கிளையைச் சேர்ந்த வே.தங்கவேலு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வரைந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;-

அறத்துக்கும் மறத்துக்கும் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நீதிக்கும் அநீதிக்கும் இடையில் நடைபெறும் போரில் நடுநிலைமைக்கு இடமில்லை என்பது உண்மை. எமது அரசியல் எப்போதும் அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதனால் இழப்பு வரலாம். ஆனால் அது தற்காலிகமானது. முடிவில் அறம்தான் வெல்லும். நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதவி, பணம் இரண்டையும் காட்டி அதர்ம அரசியல் நடத்தும் மஹிந்த இராஜபக்சாவை ஆதரிப்பது அறம் சார்ந்ததாக இருக்க முடியாது. ரணில் விக்கிரமசிங்கி ஒன்றும் வானத்துத் தேவதையில்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்மக்களைப் பொறுத்தளவில் மஹிந்த இராஜபக்சா நிச்சயம் ஒரு தேவதையல்லர். அவர் ஒரு பிசாசு.

அவர் பதவி ஏற்றதும் கடந்த நவம்பர் 01 ஆம் திகதி வியாழக்கிழமை முல்லைத்தீவு, செம்மலை – நாயாறு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் திடீரெனப் புத்தர் சிலை அவசர அவசரமாக நிறுவப்பட்டுள்ளது. இது அந்தப் பகுதியிலுள்ள இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

போருக்குப் பின்னர் பௌத்தர்கள் இல்லாத இடங்களில் பௌத்த விகாரைகள் நிறுப்பட்டு வருவதற்கு இது மேலும் ஓர் எடுத்துக்காட்டு. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்தமை அரசியல் யாப்புக்கு முரணானது என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர், இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளன .

ரணில் – மஹிந்த இருவருக்கும் இடையில் நடுநிலைமை வகிக்குமாறு சிலர் யோசனை சொன்னமை சமகால அரசியலை மட்டுமல்ல கடந்த கால அரசியலை அவர்கள் சரியாக
புரிந்து கொள்ளவில்லை என்பதைக் காட்டியது. இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் அறம்சார்ந்த முடிவை நீங்கள் எடுத்துள்ளீர்கள். அதற்கு எமது வாழ்த்துக்கள். பாராட்டுகள். – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்