தான் போக வழியில்லை மூஞ்சூறு விளக்குமாற்றையும் தூக்கிச்சாம்!

நக்கீரன்

கனடாவில் இருந்து வெளிவரும் ஈழமுரசு தனது சென்றவாரப் பதிப்பில் (ஒக்தோபர் 25 – நொவெம்பர் 01) முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பற்றிய செய்திகள், கட்டுரைகளுக்கு மொத்தம் 40 பக்கங்களில் 15 பக்கங்களை ஒதுக்கியிருந்தது. அந்தப் பங்கங்களில் தமிழ் மக்கள் கூட்டணியின் முதல் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு, அவர் பற்றிய கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

அவருக்குச் சாமரம் வீசும் மு. திருநாவுக்கரசு, யதீந்திரா மற்றும் நிலாந்தன் ஆகிய மூன்று பேர்களது கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. எதிர்பார்த்தது போலவே விக்னேஸ்வரனுக்கு பாமாலை பாடி பூமாலை சூடியுள்ளார்கள். அவரிடம் காணப்படும் கரும்புள்ளிகளுக்கு வெள்ளையடித்து விட்டுள்ளார்கள்.

முதல் பக்கத்தின் தலைப்பு “துவண்டு போகாத தமிழ் மக்களின் நீதிக்கான குரலாய் நிமிர்ந்து நின்ற விக்னேஸ்வரனின் ஐந்தாண்டுக் காலம்.”

இந்தத் தலைப்பு விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டியது மாதரி இருக்கிறது!

குறைந்த பட்சம் வட மாகாண சபையின் இறுதி அமர்வில் விக்னேஸ்வரன் அவர்களது 5 ஆண்டுகால ஆட்சியின் கோலத்தைப் பற்றி விமர்ச்சித்த எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அவர்களது பேச்சைப் போட்டிருக்கலாமே? ஏன் போடவில்லை அதுதானே ஒரு வார ஏட்டின் ஊடக அறம்?

விக்னேஸ்வரனின் ஆட்சி வினைத்திறன் அற்ற ஆட்சி என்பதே எல்லாத் தரப்பினரதும் தீர்ப்பாகும்.

அவரது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 444 தீர்மானங்களில் ஒரு சிலவற்றைத் தவிர ஒரு மாகாண சபையின் ஆட்சிக்கு உட்பட்டதல்ல.

மு.திருநாவுக்கரசு, யதீந்திரா, நிலாந்தன் போன்றோர் விக்னேஸ்வரனின் இருண்ட ஆட்சிக்கு, தன்முனைப்பு ஆட்சிக்கு எவ்வளவுதான் சோப் போட்டுக் கழுவினாலும் அழுக்குப் போகாது.

இந்த எழுத்தாளர்கள் கோட்டானை மாங்குயில் என்றும் வான்கோழியை தோகை மயில் என்றும் நரியைப் பரியென்றும் பூனையைப் புலி என்றும் மாற்றிக் காட்டி போற்றித் துதிக்கிறார்கள்.

விக்னேஸ்வரன் ஒரு நன்றி கெட்ட மனிதர். நாலு கால் விலங்கிடம் இருக்கும் நன்றி உணர்வு இந்த இரண்டு கால் மனிதரிடம் இல்லை.

(1)ஏறிய ஏணியை எட்டி உதைத்தவர். அன்னமிட்ட கையைக் கடித்தவர்.

(2) பதவிக்கு வந்த காலம் முதல் தனக்கு மட்டும் எல்லாத் தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அடிப்படை அரசியல் இல்லாத கற்றுக் குட்டிகள் என்ற ஆணவத்தோடு நடந்து கொண்டவர்.

(3) இரண்டு ஆண்டுகள் மட்டும் பதவியில் இருப்பேன் அதன்பிறகு வேறு யாராவது அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னவர் இப்போது மேலும் 5 ஆண்டுகள் பதவியில் நீடிக்கப் படாத பாடு படுகிறார்! புதுக் கட்சி கூடத் தொடங்கியிருக்கிறார்.

(4) ஐநாமேம்பாட்டு நிறுவனம் (UNDP) வட மாகாண விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை உயர்த்திக் கொள்ள அ.டொலர் 150 மில்லியனைக் (ரூபா 25,500 மில்லியன்) அன்பளிப்பாகக் கொடுக்க 2015 இல் முன்வந்தது. ஆனால் தனது மருமகனுக்கு அந்தத் திட்டத்தில் சிறப்பு அதிகாரிப் பதவி கொடுக்க விண்ணப்பித்து அது மறுக்கப் பட்ட போது அந்த உதவி நிதியை வேண்டாம் என்று புறந்தள்ளினார். இதன் மூலம் ஏழை, எளிய தமிழ் விவசாயிகளது வயிற்றில் அடித்த பாவத்தைத் தேடிக் கொண்டார்.

(5) தமிழ் அரசுக் கட்சி சார்பாக நியமிக்கப்பட்ட கல்வி அமைச்சர் குருகலராசா பதவி விலகின இடத்துக்கு ததேகூ ஒருவரை பரிந்துரை செய்யுமாறு விக்னேஸ்வரன் கேட்டார். எழுத்தில் தரும்படி கேட்டார். அதை வாங்கி வைத்துக் கொண்டு தனது அடிவருடிகளில் ஒருவரான சர்வேஸ்வரனுக்கு கல்வி அமைச்சர் பதவியைக் கொடுத்து அழகு பார்த்தார். அனந்தியையும் தன்னிச்சையாக அமைச்சர் பதவியில் அமர்த்தினார்.

(6) ஒரு அமைச்சரை நியமிப்பதற்கு முதலமைச்சரது பரிந்துரை தேவை. அதன் அடிப்படையில் ஆளுநர் அவருக்கு அமைச்சர் பதவியை வழங்குகிறார். தன்னை நீதியரசர் என்று சொல்லிக் கொள்ளும் விக்னேஸ்வரன் தனது விருப்புப்படி டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து கடித மூலம் விலக்கினார். தன்னை விலத்தும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்று டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதி மன்றத்தில் வழக்குப் போட்டார். நீதிமன்றம் டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தது செல்லுபடியாகாது, முதலமைச்சர் எழுதிய கடிதம் சட்ட வலுவற்றது, டெனீஸ்வரன் அமைச்சராகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் அவருக்கு இடைஞ்சல் செய்யக் கூடாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பளித்தது. இதனை முதலமைச்சர் நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டார். அதன் காரணமாக டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார். டெனீஸ்வரனிடம் தனது தவறை ஒப்புக் கொள்ள விக்னேஸ்வரன் பிடிவாதமாக மறுக்கிறார். எதிர்வரும் 10 ஆம் நாள் நடைபெறும் வழக்கு விசாரணை அன்று மேன்முறையீடு நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்புப் பற்றி விக்னேஸ்வரன் எழுப்பிய ஆட்சேபனை தொடர்பாக தீர்ப்பளிக்க இருக்கிறது.

(7) முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், முதலமைச்சர்கள் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. எதிர்க்கட்சித் தலைவரை அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

(8) அரசாங்கத்திடம் ததேகூ நா.உறுப்பினர்கள் சலுகைகளைப் பெறுவதாக குற்றம்சாட்டும் முதலமைச்சர் விமானத்தில் யாழ்ப்பாணம் – கொழும்பு – யாழ்ப்பாணம் பயணம் செய்ய முன்னாள் ஆளுநர் சி.ஏ. சந்திரசிறியிடம் கெஞ்சிக் கூத்தாடி சலுகை பெற்றுள்ளார். அவரது விமானப் பயணம் தொடர்பாக உரூபா 22 இலட்சம் செலவழித்துள்ளார். எனது பதவிக்கு அ.டொலர் 40,000 பெறுமதியான வாகனம் அல்ல அ.டொலர் 65,000 பெறுமதியான வாகனம் வேண்டும் என்று அடம் பிடித்தார்.

(9) விக்னேஸ்வரன் ஆளுநர்களோடு சண்டை, நீதிமன்றத்துக்குப் போகும் அளவுக்கு மாகாண சபை செயலாளரோடு சண்டை., சக அமைச்சர்களோடு சண்டை, பிரதமரோடு சண்டை, சம்பந்தன், சுமந்திரன் இருவரோடும் ஓயாத சண்டை. எனக் காலத்தைக் கடத்தினார்.

(10) கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் நாலு பேருக்கு வேலை கொடுக்கிற மாதிரி ஒரு ஆடைத் தொழிற்சாலை தன்னும் கட்ட முடிந்ததா?

(11) இப்போது அரசியல் தீர்வுதான் முக்கியம் பொருளாதார மேம்பாடு அப்புறம் என்று விக்னேஸ்வரன் புது வியாக்கியானம் செய்கிறார். இது அவரது மேல்தட்டு கனவான் மனப்பான்மையைப் பிரதிபலிக்கிறது. போரினால் நொந்து நொடிந்து போயுள்ள எமது மக்களுக்குக் குடியிருக்க வீடு, குடிக்கத் தண்ணீர், உடுக்க உடை, படிக்கப் பள்ளிக் கூடங்கள், நோய்க்கு மருந்தகங்கள் வேண்டாமா? ஆனானப் பட்ட வி.புலிகளே போர்க்காலத்தில் அரசியல் விடுதலைக்குச் சமாந்திரமாக பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் பாடு பட்டார்கள். தென்னை, தேக்கு என பயன்தரு மரங்களை நட்டு வளர்த்தார்கள். புதுக் குடியிருப்புக்களை உருவாக்கினார்கள்.

விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியைக் கடந்த ஒக்தோபர் மாதம் 24 ஆம் நாள் தொடங்கியுள்ளார். அந்தக் கூட்டத்தில் தானே தலைவர் என அறிவித்தார். உறுப்பினர்களே இல்லாத கட்சியில் இவர் எப்படி தலைவரானார்? அப்படியென்றால் துணைத் தலைவர் எங்கே? செயலாளர் எங்கே? பொருளாளர் எங்கே? பொதுக் குழு எங்கே? செயல் குழு எங்கே? கூட்டணியில் இருக்கும் மற்றக் கட்சிகள் எவையெவை? தலை முதல் அடிவரை எல்லாமே அவரா? இது எந்த நாட்டு சனநாயகம்?

ஒரு கட்சியை உருவாக்கி அதனை நடாத்துவது தோசைக்கு மா அரைக்கிற வேலை அல்ல! அதற்கு நேரம் வேண்டும். காலம் வேண்டும். உழைப்பு வேண்டும், நிதி வேண்டும், ஆயிரக் கணக்கில் தொண்டர்கள் வேண்டும்.

அகவை எண்பதைத் தொட்டுவிட்ட , அவ்வப்போது மருத்துவ மனையில் படுத்துக் கொள்ளும் வினைத் திறனற்ற முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் ஒரு புதிய கட்சியை நடத்த முடியுமா?

இது தான் போக வழியில்லை மூஞ்சூறு விளக்குமாற்றையும் தூக்கிச்சாம் என்பது போல் இல்லையா?

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்