ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்தார் மைத்திரி! சிறீதரன் ஆவேசம்

ஜனநாயகத்தை நிலைநாட்டுவார் என யாரை இந்த நாட்டு மக்கள் நம்பினார்களோ அவரே மிகமோசமான முறையில் ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்து அழிப்பவராகவும் ஜனநாயகத்தை மதிக்காதவராகவும் காணப்படுகின்றார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டி நல்லாட்சியை ஏற்படுத்துவார் என்று நம்பித்தான் இந்நாட்டு மக்கள் மைதிரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தார்கள். ஆட்சிக்கு வந்து சில காலத்தில் அவரே இந்நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்காது மிகமோசமான முறையில் ஜனநாயகத்தை மறுப்பவராகக் காணப்படுகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.கரணவாய் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நிகழ்வில்நேற்றுமுன்தினம் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அங்கு உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில், இந்தப் பாடசாலையின் பரிசில் நாள் நிகழ்வில் கலந்துகொண்டதையிட்டுப் பெருமகிழ்வடைகின்றேன். இங்கு பரிசில் பெறு மாணவர்கள் பல திறமைகளை வெளிக்காட்டியே அதற்கான பரிசில்களைப் பெறுகின்றார்கள்.

இதனைக் காணுகின்ற ஏனைய மாணவர்களும் தமக்குள் உள்ள திறமைகளை வெளிக்காட்டிப் பல பரிசில்களைப் பெறவும் இப்பூமிப்பந்திலே சாதனைகள் பல படைக்கவும் முன்வரவேண்டும். மாணவர்களாகிய நீங்கள் எவ்வேளையிலும் மனவுறுதியையும் இறை நம்பிக்கையையும் தளரவிடாது முயற்சித்து முன்னோக்கிச் சென்று எமது வாழ்வில் முன்னேறுவதுடன் எமது இனத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

பெரியவர்கள் பலர் கூடியுள்ள இவ்விடத்தில் இச்சந்தர்ப்பத்தில் தற்கால அரசியல் நிலவரம் தொடர்பாகவும் சில கருத்துக்களைக் கூற வேண்டிய நிலையிலுள்ளேன். பல நெருக்கடிகளையும் சுமைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கும் இக்காலத்தில் நாமும் பல்வேறுபட்ட துரோகத்தனங்களையும் நம்பிக்கைத்துரோகிகளையும் எதிர்கொள்ள வேண்டியவர்களவே காணப்படுகின்றோம். இது எமக்குப் புதிதல்ல எமது இனவிடுதலைப் போராட்ட வரலாற்றில் பல நம்பிக்கைத் துரோகங்களையும் துரோகிகளைக் கண்டுள்ளோம்.

இந்நாட்டு அரசியலில் ஒரு மாற்றம் வேண்டும் எமது மக்களும் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காக ஒரு மாற்றத்தை வேண்டி எமது உரிமைகளை அடியோடு மறுத்து நின்ற மகிந்தராஜபக்சவை அகற்றுவதற்காக மைத்திரிபால சிறிசேன அவர்களை தமிழர் தரப்பின் பெரும் பங்களிப்புடன் வெற்றி பெறச் செய்து ஜனநாயக முறைப்படி அவரை ஜனாதிபதியாக்கி இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தோம்.

அவர் நாட்டில் நல்லாட்சியை மேற்கொள்வதாக வாக்குறுதியளித்து இந்நாட்டு மக்கள் நலனுக்கான ஆட்சியை முன்னெடுப்பதாகக் கூறி தனது நல்லாட்சியை முன்னெடுத்திருந்தார். பல சவால்களுக்குமத்தியில் ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்து நல்லாட்சியை முன்னெடுப்பதாகக் கூறி ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த மைத்திரிபால சிறிசேன அவர்கள் முன்னர் பல்வேறு அராஜக ஆட்சியை முன்னெடுத்த மகிந்த ராஜபக்சவுடன் தற்போது கூட்டுச் சேர்ந்து ஜனநாயகத்தைக் மதிக்காது செயற்பட்டு முறையற்ற விதத்தில் திடீரென மகிந்தராஜபக்சவைப் பிரதமராக்கி மிகமோசமான அராஜக ஆட்சியை தற்போது நடாத்தி வருகின்றார்.

உலகத்திலேயே மிகமோசமான வகையில் ஜனநாயகத்தை மீறி ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து மிகமோசமான முறையில் செயற்படும் அராஜக ஆட்சியாளனாக மைத்திரி அவர்கள் மாறியுள்ளார்.

தமிழர்களாகிய எம்மைப் பொறுத்தவரையில் எமது மக்களும் இந்த நாட்டிலே சகல உரிமைகளையும் பெற்று வாழவேண்டும் அதற்காகவே இந்த மண்ணிலே எம்மின மாவீரர்கள் பல ஈகங்களைச் செய்து தம்மையே கொடையாக்கியுள்ளார்கள். அவர்களது கனவுகளை எமது மனதிருத்தி எமது மக்களுக்கான விடுதலை நோக்கிய எமது பயணம் தொடரும் என்று மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்