சலுகைகளுக்காகவே வியாழேந்திரன் அரசு பக்கம்! சீ.யோகேஸ்வரன் எம்.பி. காட்டம்

அற்ப சலுகைகளுக்காகவே வியாழேந்திரன் மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் தாவியுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர்  நேற்று ஞாயிற்றுகிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலும், அவருக்கு அமைச்சுப் பதவி கேட்டு பல இடங்களில் திரிந்தவர்.

அவருடைய நிலையில் அமைச்சும், காசும் இல்லாமல் அவரால் வாழமுடியாது. அவருக்குப் பின்னணியாக இருப்பது காசுதான். இது தொடர்பில் மக்களாலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அதனடிப்படையில் எமது கூட்டமைப்பிலிருந்து நீண்டகாலமாக மாறக்கூடிய சூழல் இருந்து வந்தது அவர் தற்போது மாறியிருக்கின்றார்.  நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் எமது கட்சியின்தலைமைப் பீடத்திற்கும் அறிவித்திருந்தோம்.

அதிலும் நாம் எச்சரிக்கையாகவும் இருந்தோம். ஆனால் அவர் திடீரென கனடா நாட்டிற்குச் சென்றுவிட்டார். பின்னர் அவர் மீண்டும் இலங்கை வந்ததும் விமான நிலையத்திலிருந்தே நேரடியாக அரசுபக்கம் சென்றுவிட்டார்.

இதுவரைகாலம், அவர் தமிழ் மக்களின் மீது கரிசனை கொண்டமைபோல், செயற்பட்டமை, நடித்தமை, அவருடைய போலியான முகமாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்