மைத்திரியுடன் முட்டி மோத தயாரானார் சபாநாயகர் கரு! – பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வலியுறுத்து

“நாட்டின் அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கமைய பிரதமர் பதவியில் ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார். எனவே, புதிய அரசு அமைய வேண்டுமெனில் நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் நிரூபிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே சபையில் ஜனாதிபதியால் புதிய கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட வேண்டும். இதை மீறிய செயற்பாடுகள் ஜனநாயகத்துக்கு விரோதமானவையாகும். அவை நாட்டுக்கு சர்வதேச ரீதியில் அவமரியாதையை ஏற்படுத்தும்.”

– இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றக் குழு அறையில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்வரும் 14ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் பெரும்பான்மைப் பலத்தை புதிய அரசு நிரூபிக்கத் தேவையில்லை எனவும், அன்றைய தினம் ஜனாதிபதியால் புதிய கொள்கைப் பிரகடனம் மட்டும் வாசிக்கப்பட்டதுடன் சபை ஒத்திவைக்கப்படும் எனவும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தாக்கல் செய்ய முடியாது எனவும் மைத்திரி – மஹிந்த கூட்டணியின் உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே மேற்கண்டவாறு சபாநாயகர் தெரிவித்தார்.

எதிர்வரும் 14ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வு ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது எனவும், இலங்கையின் அரசியல் வரலாற்றில் இப்படியொரு கேவலமான நடவடிக்கை இடம்பெறவில்லை எனவும் இதன்போது காட்டமாகத் தெரிவித்தார் சபாநாயகர்.

எனினும், எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய பின்னர் முரண்பாடுகளைக் கைவிட்டு நிலையான அரசை உருவாக்குவதற்கு உள்ள வாய்ப்பு தொடர்பில் உறுப்பினர்களின் கருத்தை அறிவிக்க ஜனாதிபதியால் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனவும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

சபையில் ஜனநாயகத்தை மீறிய செயற்பாடுகளுக்குத் தான் அனுமதி வழங்கமாட்டேன் எனவும், அதற்கேற்றவாறு நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்க வேண்டும் எனவும் சபாநாயகர் கோரினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்