இலங்கைக்கு பிரித்தானியாவின் மறைமுக ஞாபகமூட்டல்!

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக 2016-2019 காலப்பகுதியில் ஒதுக்கப்பட்ட எந்தவொரு நிதியுதவியையும் பிரித்தானிய அரசாங்கம் திரும்பப் பெறவில்லை என ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நிழல் வெளிவிவகாரச் செயலர் எமிலி தோர்ச்செர்ரியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, அவர் இந்த கருத்தினை கூறினார்.

இலங்கை நீண்ட கால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப பிரித்தானியா தொடர்ந்தும் உதவுவதாக அவர் தெரிவித்தார்.

“முரண்பாடு, உறுதிப்பாடு மற்றும் பாதுகாப்பு நிதியத்தினூடாக இலங்கைக்கு வழங்கப்படும் அனைத்து நிதிகளும் நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மேம்பட்ட மனித உரிமைகள் ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், நீண்ட கால உள்நாட்டுப் போரின்போது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில் அமைந்துள்ளது” என கூறினார்.

ஆகஸ்ட் மாதம் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் யுத்தத்தால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு மேற்குறிப்பிட்ட நிதியத்தின் மூலம் ஒரு மில்லியன் பவுண்ட்ஸ் நிதியுதவி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக, இந்த மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து (2016-2019) 7.9 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளதாக கூறிய அவர், பொலிஸ் சீர்திருத்தம், நல்லிணக்கம் மற்றும் சமாதானமுயற்சி ஆகியவற்றிற்கான ஒத்துழைப்பு மற்றும் வடக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை ஆகியனவும் இதில் உள்ளடங்குவதாகவும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்