மட்டக்களப்பில் கனமழை-போக்குவரத்து பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் படுவான்கரைக்கான பல போக்குவரத்து பாதைகள் தடைப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக பெய்வரும் மழை காரணமாக மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளில் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு வாவியினை அண்டிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அப்பகுதிகளில் உள்ள வீதிகளினால் போக்குவரத்து செய்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

இதேபோன்று மட்டக்களப்பு நகரில் இருந்து வவுணதீவு பகுதிக்கான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.

விமான நிலைய வீதி மற்றும் வளையிறவு பாலம் ஆகியவற்றிற்கு மேலாக இரண்டு அடிக்கு மேல் வெள்ள நீர் செல்வதன் காரணமாக அப்பகுதி ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.

இதேபோன்று போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி-மண்டூர் பிரதான வீதியூடாகவும் வெள்ள நீர் பாய்வதன் காரணமாக வெல்லாவெளி ஊடாக அம்பாறைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக மழைபெய்யும் நிலமை காணப்படுமானால் நிலமை இன்னும் மோசமடையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்