ஜனநாயகத்தை மதிக்காதமையால் ஜனாதிபதியிடம் பெற்ற விருதை மீள ஒப்படைக்கும் மூத்த நிர்வாக சேவை அதிகாரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து பெற்ற சிறந்த நிர்வாக சேவை அதிகாரிக்கு வழங்கப்பட்ட தேசமான்ய விருதை அரசமைப்புக்கு முரணாக, ஜனநாயகத்தை மதிக்காமல் மைத்திரிபால சிறிசேன செயற்பட்டமையால் அந்த விருதை அவரிடமே மீள ஒப்படைக்க எண்ணியுள்ளார் மூத்த நிர்வாகசேவை அதிகாரி.

இதுதொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு வரைந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:-

எமது மகத்தான தேசத்துக்கு நான் செய்திருக்கக்கூடிய சேவைகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து கிடைத்த அங்கீகாரமாக எனக்கு அளிக்கப்பட்ட தேசமான்ய விருதைக் கொண்டாடுவதற்கு அன்று மூன்று கண்டங்களில் இருந்து எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் நாட்டுக்கு வந்திருந்தார்கள்.

உங்களை முன்கூட்டியே நான் பெரிதாக தெரிந்தவன் அல்லன். ஆனால், நீங்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது எனது குடும்பத்தவர்களும் நண்பர்களும் நானும் பெருமகிழ்ச்சி அடைந்தோம். அந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கடந்த சில நாட்களாக எமது 70 வருடகால பழமைவாய்ந்த ஜனநாயகத்தையும் அப்பட்டமாக நீங்கள் அவமதித்து முன்னெடுத்திருக்கின்ற நடவடிக்கைகள் இல்லாமல் செய்துவிட்டன.

நீங்கள் எனக்குத் தந்த தேசமான்ய பதக்கத்தையும் சான்றிதழையும் கவலையுடன் திருப்பித்தருவதை விட வேறுவழி, ஒரு விசுவாசமான, தேசப்பற்றுடைய இலங்கையன் என்ற வகையில் எனக்குத் தெரியவில்லை. நான் இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன். நாடு திரும்பியதும் பதக்கத்தையும் சான்றிதழையும் உங்கள் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகளைச்செய்வேன்.

எனது இந்த முடிவு எளிதாகவோ அல்லது அவசரமாகவோ எடுக்கப்பட்ட ஒன்றல்ல. 60 வருடங்களுக்கு முன்னர் இலங்கை பொதுநிர்வாக சேவையில் முதலில் இணைந்துகொண்ட நாளில் இருந்து நான் வரித்துக்கொண்ட கோட்பாடுகளின் பிரகாரமே செயற்பட்டுவந்திருக்கின்றேன். அது எனக்குச் சுமையாக இருந்தாலும் பெருமையுடன் ஏற்றுக்கொண்ட சுமை.

எனது நீண்டகால இலங்கை நிர்வாகசேவையில் எனது விழுமியங்களை விட்டுக்கொடுப்பதற்கு மறுத்த காரணத்தால் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கங்களின் கீழும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கங்களின் கீழும் நான் அடிக்கடி தொல்லைகளுக்குள்ளாக்கப்பட்டிருந்தேன் என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்