தமிழருக்கு பிரயோசனமற்ற இலங்கை அரசமைப்பு – சிவமோகன் எம்.பி. விசனம்

இலங்கையில் அரசியல் யாப்பை மீறி சில விடயங்கள் அரங்கேறி வருகின்ற நிலையில், அரசியல் யாப்பு மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைப்போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கையின் அரசியல் யாப்பு என்பது ஒரு மோசடித்தனமான அரசியல் யாப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தா.சிவசிதம்பரத்தின் 26ஆம் ஆண்டு நினைவுதினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த சிவமோகன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

19ஆவது அரசியலமைபபு திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன எனக் குறிப்பிட்டப்பட்ட போதும், அதிலுள்ள சில சரத்துக்களை வைத்துக்கொண்டு இரு தரப்பினரும் இன்று வியாக்கியானம் செய்துகொண்டிருக்கின்றனர் என்று சிவமோகன் இதன்போது குறிப்பிட்டார்.

13ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்ட காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பின்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பறிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மகாவலி அபிவிருத்தி சபை என்ற ஒரு சபையால் அரசியலமைப்பை மீற முடியும் என்ற நிலைப்பாடு இருந்தால், தமிழர்களுக்கான தீர்வு அரசியல் யாப்பினால் கிடைக்கப்போவதில்லை என்றும், போராடி அவற்றை பெற்றுக்கொள்ளும்வரை  பிரச்சினைகள் தொடரும் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்